Sunday, March 10, 2024

என் வாழ்க்கைக் கணக்கு!

 என்வாழ்க்கைக் கணக்கு!


வாழ்க்கைப் பயணத்தைக் கூட்டிக் கழித்தேதான்

பார்க்கின்றேன்! வாழத் தெரியாத ஏமாளி

நானென்றே எண்ணிக் கலங்குகிறேன் என்னென்பேன்!

வானத்தைப் பார்க்கின்றேன் நின்று.


ஏக்கப் பிழிவு மனதைப் பிசைகிறது!

தேக்க நிலைகளோ தேகத்தை மொய்க்கிறது!

ஊக்கமும் உற்சாக வேகமும் கானலாகும்

காட்சியில் என்இறுதி நாள்.


நாய்களும் பூனைகளும் வாழ்கின்ற மண்ணகத்தில்

வாழும் முறையறிந்து வாழவில்லை நானிங்கே!

வாழ்க்கைக் கணிதமே தப்பாகிப் போனதோ?

நாள்தோறும் வாடுகிறேன் நான்.


காயங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்துக்

காயப் படுத்தித்தான் பார்க்கிறதே! தேகத்தை

மேய்ச்சல் நிலமாக்கி வாட்டுகின்ற கோலத்தில்

சாய்ந்தே சரிகின்றேன் இங்கு.


தாயம் விழுந்தால் மகிழ்வேன்நான்! பன்னிரண்டு

ஓயாமல் காய்கள் விழுந்தால் லாபமில்லை!

தேவைகள் யாரறிவார்? தேவைக் குதவாத

வாழ்வெதற்கு இங்கே எனக்கு?

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home