நற்றமிழர் இராமாநுசன்
நற்றமிழர் இராமாநுசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத் திருநாள் 20.06.25
அறுபத்தைந் தாண்டு நிறைவில் மகிழும்
நறுந்தமிழ் நற்றமிழர் ராமா நுசனார்
குறளறிஞர் செந்தமிழ்த் தூதராவார்! பேச்சில்
சிறந்தவர் பன்முக ஆற்றல் மிளிர
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
*செ.வ.இராமாநுசன்*
*ஊனூர்:* மோ.வன்னெஞ்சூர் - 606213.
*உறையூர்:*
சென்னை - 600074.
*உலாவூர்:*
--------
நாள்: 20-06-2025.
*பிறந்த நாளில் பெருமையைக் கொண்டோம், சிறந்த உங்களின் வாழ்த்துகளாலே!*
அன்பு சேர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
ஒவ்வொரு நாள் காலையும், நமக்கு பிறந்த நாளே! ஒவ்வொரு பிறந்த நாளும், நமக்கு சிறந்த நாளே!
குழந்தையாகப் பிறந்தது முதல் ஒவ்வொரு நாளிலும், இயற்கை நம்மை வளர்த்தெடுக்கிறது. தானாக நம் உடல் வளர்ந்தாலும் இயற்கையை ஒட்டி வாழ, நம் அறிவை நாமாகத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது கல்வி அறிவு, கேள்வி அறிவு மற்றும் பட்டறிவினால் மட்டுமே உருவாக முடியும்.
பெற்ற அறிவினால் நம் பேதைமை மட்டும் நீங்கவில்லை. நம் தனிமையும் வறுமையும் கூட நீங்கி விடுகிறது. வளர்ச்சி பெருகுகிறது; மகிழ்ச்சி கூடுகிறது. உறவுகள் நெருங்குகின்றனர். அதனால் நம் வாழ்நாளும் நீள்கிறது. இந்த உலகமும் அழகு பெறுகிறது.
இந்த அழகான உலகத்தில் நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நிற்கின்றோம். ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பாராட்டத் துடிக்கின்றோம். ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு உயர்ந்து வாழ்கின்றோம்.
அதனால் நேற்று (20-06-2025) அடியேனின் பிறப்பெடுத்த அகவை நாள்தனை, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகளோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். பெரும் மனநிறைவைப் பெற்றேன்.
65 ஆண்டுகள் அகவையை நிறைவு செய்துள்ளேன் என்பதில் எழுச்சியைக் கொள்கின்றேன். எனது வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று நான் எண்ணவில்லை; எனது வாழ்நாள் நீண்டு கொண்டே போகிறது என்றே நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எந்த காலத்திலும், எவரோடும் நாம் நம்மை வாழ்நாள் கால அளவில் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும், அவரவர்களின் மன இயல்பும் தான் அவரவர்களுக்கு உரிய வாழ்நாளை நல்குகின்றன.
நாமும் நம் வாழ்நாளினை வளர்பிறை நிலவுக்கு இணையாக எண்ணிக்கொள்வோமாக! இலக்கியங்களின் சுவைக்கொப்ப இயங்கிக் கொள்வோமாக! புகழ்ச்சிக்கு பின்னால் செல்வதைத் தவிர்ப்போமாக! நாக்கு என்னும் இதயத்திற்கு ஒப்பான உறுப்புதனை, உணவுச் சுவையில் இருந்தும், வரம்பில்லா - பயனற்றச் சொற்படுத்தலில் இருந்தும் காத்துக் கொள்வோமாக!
இனி விடிகின்ற ஒவ்வொரு வெள்ளை பொழுதிலும் அன்றலர்ந்த மலராக, அகம் மலர்ந்து - அன்பு மனம் கொண்டு - கருணை மணம் வீசி, நட்புணர்வில் அழகுறுவோமாக!
*வெற்றி நமதே!*


0 Comments:
Post a Comment
<< Home