Saturday, October 19, 2019

வள்ளுவம் தந்த ஊக்கத்தில்! 1

பெற்றோரை வழிபடு!

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகரம் எழுத்தின் முதன்மைபோல் பெற்றோர்
முதன்மையாம் இங்கே நமக்கு.

குறள் 2

கற்றதனால் ஆன பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பெற்றோரைப் பேணி வணங்காதோர் கற்றிருந்தும்
சற்றும் அறிவற்றோர் சாற்று.

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர்போன்ற நல்மனப் பெற்றோர் மகிழ
வளர்ந்தாலே வாழலாம் நீடு.

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
சீண்டும் விருப்புவெறுப்  பில்லாத பெற்றோரை
வேண்டிவாழ்ந்தால் துன்பமில்லை சொல்.

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
அருமையான பெற்றோரை உள்ளம் உணர்ந்தால்
இருவினைகள் தீண்டாது செப்பு.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
நெறிப்படுத்தி ஆசைகளை விட்டுவிட்ட
பெற்றோர்
நெறிநடந்தால் வாழலாம் நீடு.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
இணையற்ற பெற்றோர் வழிநடந்தா
லன்றி
மனக்கவலை தீர்வதில்லை சாற்று.

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாம் பெற்றோர் அறிவுரை  கேட்போர்
பிறகடலை நீந்தல் எளிது.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மேனிப் பொறிகள் இருந்துமற்ற தன்மைபோல்
தான்பெற்றோர் தாள்வணங்கார் வாழ்வு.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறவிக் கடலைக் கடப்பவர்கள் பெற்றோர்
தடம்தவிர்த்தால் ஏலா துணர்.

மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home