Sunday, December 01, 2019

நினைவில் நிற்கும் அண்ணன் கருணைதாசன்!

அன்பும் கருணையும் பேச்சில் இனிமையும்
தன்னகத்தே கொண்டே அதிர்ந்து பேசாத
அண்ணன் கருணையை எண்ணி வணங்குகிறேன்!
பண்பின் உறைவிடத்தை வாழ்த்து.

மதுரை நகரில் தெரியாதோர் இல்லை!
எடுப்பான தோற்றம் கழகத்தின் தொண்டர்!
விறுவிறுப் பான உழைப்பின் உருவம்!
மிடுக்கான பார்வையே சொத்து.

குழந்தை முதலாய்ப் பெரியோர் வரைக்கும்
பழகுவதில் தென்றல்! சிரித்தமுகப் பேச்சு !
அனைத்துக் கட்சியின் தொண்டர்கள் போற்றும்
இணையற்ற அண்ணனை வாழ்த்து.

எழுத்தாளர் மன்றம் தமிழுணர்வை ஏந்தி
செழுமையுடன் செம்மாந்து வீறுநடை போட
உழைத்தவர்! மன்ற மலரில் கவிதை
எழுதவைத்தே அக்கவிதை அந்த மலரில்
வெளிவரப் பார்த்தவரை வாழ்த்து.

பொதுநலத்தில் தன்னலம் இன்றி வாழ்ந்தே
உடுக்கை இழந்தவன் கைபோல வாழ்வில்
இடுக்கண் களைந்த கருணைதாசன் என்றும்
பொதுமக்கள் போற்றவாழ் வார்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home