Tuesday, February 25, 2020

அருள்தாஸ்! அன்றிருந்து இன்றுவரை!

சிறுவனாக வாழ்ந்தபோது பக்கத்து வீட்டில்
துறுதுறு வென்று விளையாடிச் சீண்டும்
குறும்புத் தனங்களை எண்ணுகின்றேன் இன்று!
சிறுவன் பருவம் இனிப்பு.

நாமிருவர்  சுண்டுப் பலகை விளையாடும்
நேரத்தில் சுண்டுப் பலகை எடுத்தேதான்
வீட்டைப் பிரிக்கின்ற தட்டித் துளைவழியே
வேகமாகச் சென்றிடுவாய்! அம்மாவை நானழைத்து
வாகாக வந்திடுவேன் கேரம்போர்டைத் தந்திடுவாய்!
ஆகா நினைத்தால் சிரிப்பு.

காலம் பிரித்தாலும் பென்னரில் ஒன்றுசேர்ந்தோம்!
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் எல்லாமே
ஊற்றெடுக்க அந்த இளமைப் பருவத்தில்
ஆடி முடித்தோம் இல்லற வாழ்வேற்றோம்!
ஓடி உழைத்தோம் உயர்ந்து.

கடமைப் பொறுப்பிலே காலம் கரைய
குழந்தைகள் வாழ்வை அமைத்துக் கொடுத்தோம்!
களத்தில் களைப்பு  முதுமை வயது
பலவித நோய்கள் சிகிச்சைகள் என்றே
அலைச்சலில் சென்றது வாழ்வு.

முதுமையின் தாக்கம் முடக்க முடக்க
தடுமாற்றம் தள்ளாட வைக்க முணங்கும்
கடுமையோ நேரடி வாய்ப்பைக் கெடுக்க
தொலைப்பேசி பேச்சிலே காலம் கரைய
பழையதைப் பேசிச்  சிரித்தோம் மகிழ்ந்தோம்!
அழைப்புவந்தால் சென்றிடலாம் என்று.

அருள்தாஸ் அழைப்பு வந்ததும்   சென்றாய்!
இருளில் தனிமை உணர்வை அடைந்தேன்!
அருளே! உனக்கின்று நாளை எனக்கே!
உருள்கின்ற காய்களில் ஒன்று.

மதுரை பாபாராஜ்
25.02.20





0 Comments:

Post a Comment

<< Home