என்னடா வாழ்க்கை?
என்னடா வாழ்க்கை?
------------------------------ --------------------
நானெடுத்த பிறவி இதுதானா?
நாளெலாம் துன்பம் துணைதானா?
தாயே! இதுதான் சரிதானா?
தமிழே! இதுஉன் வரம்தானா?
காட்டுக்குள் அலைவதுபோல் அலைகின்றேன்--நான்
கூட்டத்தில் தொலைந்ததுபோல் அழுகின்றேன்!
வேட்டைக்குப் பலியாடாய் நிற்கின்றேன்!--வறுமைச்
சாட்டைக்கு விருந்தாகித் துடிக்கின்றேன்!
பாலைக்குள் பயணத்தைத் தொடர்கின்றேன்---சோர்ந்தே
ஆலையில் சக்கையென விழுகின்றேன்!
சோலையும் என்னை வெறுக்கிறதே---தேன்
மாலையும் எனக்குக் கசக்கிறதே!
வாழ்வினில் நிம்மதி தேய்கிறது---என்
வாசலில் விரக்தி பாய்கிறது!
ஊழ்வினை என்பது இதுதானா?--இந்தத்
தாழ்வுகள் எல்லாம் நிலைதானா?
மதுரை பாபாராஜ்
நூல்:மகிழம்பூ
ஆண்டு:1997
0 Comments:
Post a Comment
<< Home