Wednesday, March 25, 2026

கல்வி--40

 ------------------------------------------------

     கல்வி--40

------------------------------------------------------------

கற்பதை முழுமையாய்க் கற்கவேண்டும்!

கற்றதற் கேற்ப நடக்கவேண்டும்!


எண்ணும் எழுத்தும் படிப்பாகும்!

வாழ்க்கைப் பாதையின் கண்களாகும்!


கற்றவர் முகத்தில் இருப்பதைத்தான்

கண்கள் என்றே சொல்வார்கள்!


கல்லா மாந்தர் கண்ணிரண்டும்

கண்கள் அல்ல புண்கள்தான்!


பண்புடன் பேசி மகிழ்ந்துவிட்டு

இங்கே பிரியும் நேரத்தில்

மீண்டும் என்று சந்திப்போம்

என்றே சான்றோர் ஏங்கவைப்பார்!


செல்வம் உள்ளவர் முன்னாலே

வறியவர் நிற்கும் கோலம்போல்

படித்தவர் முன்னே படிக்காதோர்

தாழ்ந்தவ ராக நின்றிருப்பார்!


கேணியைத் தோண்டு நீரூறும்!

படிக்கப் படிக்க அறிவூறும்!


கற்றவ ருக்கோ இவ்வுலகம்

சுற்றம் போல உறவாகும்!


இதனால் ஒருவர் இறுதிமட்டும்

ஏனோ படிக்கக் கூடாது?


இந்தப் பிறவியில் படித்துவிட்டால்

ஏழு பிறவிக் கரணாகும்!

மக்கள் திளைக்கும் மகிழ்ச்சிக்கு

காரண மான கல்வியினை

மேலும் சான்றோர் கற்பதற்கு

விரும்பித் தானே வாழ்வார்கள்!

கல்விச் செல்வம்  நிலையாகும்!

மற்றவை எல்லாம் நிலையல்ல!

-------------------------------------------------------------



0 Comments:

Post a Comment

<< Home