குறள்சிலம்பு நிறைவு
குறள்சிலம்பு நிறைவு
புகார் எனது ஊர்
துயரப் புறாவின் அவலத்தை நீக்கி
உயர்ந்த சிபியாண்ட மண்.
கன்றை இழந்த பசுவின் துயருக்குத்
தன்மகனே காரணம் என்று
தெரிந்ததும் தேர்க்காலில் இட்டேதான் கொன்று
நெறிகாத்த சோழனின் ஊர்
புகார்தான் நான்பிறந்த பொன்னகரம்! அவ்வூர்ப்
புகழ்பேசும் மாசாத் துவான்
நன்மகனோ வாழ்வதற்கு மாமதுரை வந்தவனோ
என்சிலம்பை விற்க முயன்று
ஆவலுடன் நின்றவனை இங்கே கொலைசெய்த
கோவலனின் கண்ணகி நான்.
உன்முன்னே நிற்கின்றேன் நீதிகேட்டு! மன்னவனே
என்னவென்று சொல்வாய் எனக்கு.
மன்னனின் மறுமொழி
கள்வனைக் கொல்தல் அநீதியா? மங்கையே!
நல்லறந் தானே? விளம்பு.
அறநெறியா? என்சிலம்பில் உள்ள பரல்கள்
அற்புத மாணிக்கம் பார்.
முத்துப் பரல்களைக் கொண்டதே நம்சிலம்பு!
அச்சிலம்பைக் கொண்டுவந்தார் அங்கு.
கண்ணகி தன்சிலம்பை வீசி எறிந்ததும்
அங்கே உடைந்ததைப் பார்.
மாணிக்கப் பரலொன்று பாண்டியனின் வாயருகே
ஊன்றி விழுந்ததே அங்கு.
மாணிக்கக் கற்களைப் பர்த்தான்! திகைத்தான்!
பாண்டியன் வெட்கினான் சாய்ந்து.
கொல்லனின் பொய்யுரை கேட்டநானா பார்வேந்தன்?
இல்லையில்லை கள்வனே நான்.
துடித்துக் குமுறினான்! கெடுகென் ஆயுள்!
கதிகலங்கி வீழ்ந்துவிட்டான் மாண்டு.
கோப்பெருந் தேவி மனமுடைந்தாள்! தன்கணவன்
ஏற்ற மரணத்தைப் பார்த்து
கணவனைப் போற்றி வணங்கியே வீழ்ந்தாள்
கணவனைப் போலுயிர் நீத்து.
அரசி இறந்ததை அறியாத கண்ணிகியின் பேச்சு!
-------------------------------------------------
தேவியே! நல்லறம் தண்டிக்கும்! இன்னும்நான்
தூவும் செயல்களைக் கேள்.
வஞ்சின மாலை
------------------------------
முற்பகலில் கேடுசெய்தால் பிற்பகலில் கேடுகாண்பான்!
இப்படித்தான் தீவினை பார்.
வன்னிமரம் மடைப்பள்ளி போன்றவற்றைப் பத்தினிப்
பெண்ணொருத்தி சான்றாக்கி னாள்!
மணல்பாவை செய்தாள் ஒருத்தி தான்! தோழி
கணவனாவான் இப்பாவை தான்.
கேட்டவள் அஃதேபோல் எண்ணித்தான் போற்றினாள்!
காத்திருந்தாள் பத்தினிப் பெண்.
கரிகாலன் பொன்மகள் ஆதிமந்தி வஞ்சிப்
பெருநகர் ஆட்டனத்தி தன்னை
கணவனாக எண்ணினாள்! ஆற்றில் ஆடி
மனமொன்றி இன்புற்ற நேரம்
கணவனை ஆறோ இழுத்ததைப் பார்த்தாள்!
மனம்பதறிச் சென்றாள் விரைந்து.
கரையிலேயே ஓடிக் கதறினாள்! கற்பின்
பெருமையால் அக்கடல் வந்து
கணவனைத் தந்துவிட்டாள்! ஆதிமந்தி கற்பால்
கணவனைக் காத்துநின்றாள் கேள்.
பொருளீட்டச் சென்ற கணவனை எண்ணி
உருவத்தைக் கல்லாக்கி நின்று
மரக்கலத்தை நோக்கித்தான் காத்திருந்தாள் மாது!
மரக்கலத்தில் வந்ததைப் பார்த்து
கல்லுருவை நீக்கியே நல்லுரு கொண்டேதான்
துள்ளினாள் பத்தினிப் பெண்.
இப்படிப் பத்தினிப் பெண்கள் நிறைந்தநகர்
நற்றமிழ்ப் பூம்புகார் தான்.
அப்படிப் பட்ட நகரில்தான் நான்பிறந்தேன்!
கற்பில் சிறந்தவளே நான்.
மன்னனோடு இந்த மதுரையை நானழிப்பேன்!
என்றே நகர்ந்தாள் நடந்து.
கண்ணகியின் சீற்றம்
மாமதுரை மக்களே! கேளுங்கள் ! என்னவனை
மாமன்னன் கொன்றுவிட்டான் இங்கு.
மன்னனையும் இந்த நகரையும் சீறினேன்!
என்குற்றம் இல்லையென்றாள் மாது.
மதுரையை மும்முறை சுற்றிவந்தே பார்த்து
நடுத்தெருவில் நின்றாள் சினந்து.
இடப்பக்க கொங்கையை மாதின் வலக்கைப்
புறந்திருகி வீசினாள் பார்.
அக்கினித் தேவனோ தோன்றியே" பத்தினித்
தெய்வமே" செய்வதென்ன கூறு.
அந்தணர் மற்றும் அறவோர் பசுக்கள்
பத்தினிகள் மேலுமிங்கே கேள்!
முதியோர் குழந்தைகள் வாழ்விடத்தை விட்டு
நெறிமறந்தோர் தம்மை எரி!
ஏவிய அக்கணமே மாநகர் பற்றியது!
தீப்புகை சூழ்ந்தது பார்.
அரண்மனையில் உள்ள அனைவரும் பேச்சு
வராமல் உறைந்திருந்தார் செப்பு.
நால்வகை பூதங்கள் வேற்றிடம் நோக்கித்தான்
கால்தெறிக்க ஓடின காண்.
தீயோரின் வாழ்விடம் தொட்டே எரிந்தது!
வீதி எரிந்தது நன்கு.
யானை குதிரை விரைந்தன! காதலர்
கூடலின்றி வாடினர் அங்கு.
மகளிரோ தங்கள் குழந்தைகளைத் தூக்கி
பறந்தனர் ஓடித்தான் அங்கு.
எரிந்தன ஆடல் அரங்குகள்! இப்பெண்
உரியநாடு யாதென்றார் கேட்டு.
ஆராய்ந்து பாராமல் தீர்ப்பளித்த காரணத்தால்
ஆரணங்கு சீறுகின்றாள் பார்.
கற்புக் கடம்பூண்ட இம்மங்கை யாரென்றே
சற்றும் தெரியவில்லை யே.
எங்கும் துயரம் படர்ந்திருக்க மாநகரே
துன்பத்தில் சோர்ந்தது சொல்.
கட்டுரை காதை
---------------------------
முன்நிற்க அஞ்சி மதுரா பதிதெய்வம்
பின்வந்து நின்றிருந்தாள் அங்கு.
சிலம்புக்குறள் நிறைவு!
மதுராபதியின் செய்தி
நங்கையே! உன்னிடம் ஒன்றுசொல்ல வேண்டுமம்மா!
என்பக்கம் பார்த்தேதான் கேள்.
மதுரா பதியை வலப்புறமாய் நோக்கி
அடுத்துவரும் நீயாரோ என்று
துயர்முகத்தாள் கண்ணகி கேட்டுநின்றாள்! எந்தன்
துயரறி வாயோ? விளம்பு.
நன்றாக நான்றிவேன்! மதுரா பதியாவேன்!
உன்துயரில் பங்கேற்பேன் கேள்.
வேந்தனுக்கு ஊழ்வினையும் உந்தன் கணவனுக்கு
தோன்றிய முன்வினையும் கேள்.
பாண்டிய மன்னருள் கொள்கை பொருத்திய
பாண்டியனைச் சொன்னாள் நினைந்து.
பராசரன் வார்த்திகன் மைந்தன்
நிகழ்வை
அவாவுடன் சொன்னதைப் பார்.
வார்த்திகனைக் கொட்டடியில் தப்பாய் அடைத்ததால்
வேந்தன் வழுதியர்கோன் வீழ்ந்து
திருத்தங்கால் மற்றும் வயலூரைத் தந்தே
திருத்தினான் தன்பிழை அங்கு.
கோவலன் முற்பிறவி வாழ்வில் வசுமன்னன்
ஏவலனாக வாழ்ந்தான்பார் அன்று.
பரதன் பெயரேந்தி சங்கமனைக் காட்டி
அரசன்முன் கொன்றுவிட்டான் கேள்.
சங்கமனனின் இல்லாளாம் நீலி கதறினாள்!
மன்றத்தில் ஓலமிட்டாள் பார்.
பதினான்கு நாட்கள் கழிந்தபின் நீலி
பதியுடன் சேருவேன் என்று
மலையுச்சி சென்றாள்! எந்தன் துயர
நிலையை எனக்களித்தோர் இங்கு
அவர்வாழ்வில் இங்கே அடைவதற்குச் சாபம்
உரைத்தே இறந்துவிட்டாள் வீழ்ந்து.
சாபத்தின் அப்பயனைக் கோவலன் இப்பொழுது
மாப்பழி ஏற்றான்பார் மாது.
நீயும் பதினான்கு நாட்கள் கழிந்தபின்னர்
கோவலனை தேவராகக் கண்டு
மகிழ்வாய்! மனித வடிவிலன்று!
என்றே
எடுத்துரைத்தே சென்றது பார்.
கண்ணகியின் சூளுரை
கணவனைக் காணாமல் உட்கார நிற்க
அணங்கோ உடன்படேன் என்று
நகர்ந்தேதான் கொற்றவைக் கோயிலில் சென்று
உடைத்தாள் வளையலைப் போட்டு.
நகரின் கிழக்கே கணவனுடன் வந்தேன்!
நகரில் பதிஇழந்தேன் நான்.
மேற்குத் திசைவாயில் தன்னில் தனியாகப்
போகின்றேன் என்றுரைத்தாள் நொந்து.
பள்ளங்கள் மேடுகள் பாராமல் கோவலனை
உள்ளத்தில் எண்ணியே சென்று
நெடுவேள்குன் றத்தின்மேல்ஏறினாள்! வேங்கை
நெடுமரங்கீழ் நின்றாள் தனித்து.
யாரம்மா நீயென்று கேட்ட குறவரிடம்
தீவினைக் கோலமென்றாள் மாது.
பதினான்கு நாள்கழித்து கோவலனைப் பார்க்கும்
கதிஇன்றே எண்ணிநின்றாள் அங்கு.
கோவலன் ஏற்க அவனுடன் விண்ணக
ஊர்தியில் சென்றார் பறந்து.
சோழநாட்டில் தோன்றினாள்! பாண்டிநாட்டில் பங்கமுற்றாள்!
சேரநாட்டில் ஏகினாள் விண்.

0 Comments:
Post a Comment
<< Home