குறள்சிலம்பு
குறள்சிலம்பு
கண்ணகியின் சீற்றம்
மன்னன் தவறிலே என்கணவன் மாண்டிருப்பான்!
கண்ணீரில் வாழ்வேனோ நான்?
கணவன் இழந்ததும் கைம்பெண்ணாய் நோன்பில்
மனமழுது நோவேனோ நான்?
நீர்த்துறையில் நீராடி அழுகின்ற மாதரைப்போல்
நீர்த்தே அழுவேனோ நான்?
தீயிலே என்கணவன் மூழ்கவும் நோன்பிலே
வேலியிட்டே வாழ்வேனோ நான்?
கள்வனோ என்கணவன்?
கேளுங்கள்! கூத்தில் திரண்டுள்ள எல்லோரும்
கேளுங்கள்! ஆய்ச்சியரே வந்து.
பகலவனே!ஆழியை வேலியாக்கி பாரின்
நிகழ்வனைத்தும் நீயறிவா யே!
நீயே சொல்வாய்! என்கணவன் கள்வனா?
காய்கதிர்ச் செல்வனே சொல்.
உன்கணவன் கள்வனல்ல! என்றே குரலொன்று
விண்ணிருந்து கேட்டதே அங்கு.
வானொலி
உன்கணவன் கள்வனல்லன்! கள்வனென்று சொன்னதால்
இந்நகரைத் தீயுண்ணும் பார்.
ஊர்சூழ் வரி
ஒருகையில் தன்சிலம்பை ஏந்தி நடந்தாள்!
பெருந்துயரில் நீதிகேட்டுத் தான்.
நீதியற்ற மன்னனின் ஊரிலே பத்தினி
மாதரே கேளுங்கள் இன்று.
காற்சிலம்பை வாங்காமல் என்கணவன் கள்வனென்றே
ஏனோதான் கொன்றதுங்கள் வேந்து.
காதற் கணவனைக் காண்பேன்! நல்லுரையை
மேதினியில் கேட்பேன்நான் இங்கு.
ஈதுநான் மேற்கொள்ளும் சூளுரை! கேட்கவில்லை
மாதென்னைத் தூற்றுங்கள் இங்கு!
கள்வனை ஏற்ற மனைவி இவளென்றே
எள்ளிநகை யாடுங்கள் இங்கு.
மதுரை மக்கள்
புலம்புகின்ற கண்ணகியைப் பார்த்தேதான் மக்கள்
நிலைகுலைந்து நன்றார் தவித்து.
எக்காலும் செங்கோல் வளைந்த்தில்லை! ஏனோதான்
இக்காலம் ஆனதென்றார்! சூழ்ந்து.
கோவலனைக் காட்டினர்! காண்பாளைக் காணானாய்
கோலத்தை ஏந்தினான் பார்
கணவன் உடல்மீது கண்ணகி வீழ்ந்தே
மனம்குமுற சோர்ந்தழுதாள் காண்.
மாநகரில் வாழும் மகளிரும் உள்ளாரோ?
சான்றோரும் உள்ளாரோ? சாற்று.
தெய்வந்தான் உள்ளதோ? நீதி தவறிய
இவ்வூரில் தெய்வமுண்டோ? சொல்.
பலவாறு கூறி அழுதுவிட்டு நீதி
நிலைநாட்டச் சென்றாள் வெகுண்டு.
அரண்மனை வாயிலைச் சென்றடைந்தாள்! கோப
எரிமலையாய் நின்றாள் சினந்து.
இருசிலம்பில் ஒன்றினை ஏந்தித் துயர
நெருப்பில் துடிப்பவளைப் பார்.
கணவனைத் தானிழந்தே கைச்சிலம் பேந்தி
மனமுடைந்து நிற்பதைச் சொல்.
வாயில்காப் போனோ அரசனிடம் சென்றேதான்
வாயிலில் நிற்பவளைப் பார்.
கணவனை இங்கிழந்த காரிகை நிற்கும்
அனற்கோலம் ஏந்துவதைப் பார்.
இங்கே அழைத்து வருகவென்றான் மன்னன்!
வந்தாள் புயலாய் வெகுண்டு.
கண்ணீரில் தத்தளிக்கும் காரிகையே! நீயாரோ?
என்றேதான் கேட்டான் பணிந்து.

0 Comments:
Post a Comment
<< Home