சிலம்புக்குறள்
சிலம்புக்குறள்
மதுரைக் காண்டம் 2
மூவரும் சென்றிருந்த நேரத்தில்தோன்றியதே
கானுறை தெய்வந்தான் அங்கு.
மாயவித்தை வேடத்தீல் அங்கே வசந்தமாலை
போலவே வந்தது நின்று.
மாயத்தை நன்கறிந்த கோவலனோ மந்திரத்தைச்
சீலமுடன் சொன்னான் நினைந்து.
கொற்றவை மந்திரத்தைச் சொன்னவுடன் தெய்வமும்
அப்பொழுதே நீங்கியது சென்று.
ஐயையின் கோட்டம் அடைந்தனர் மூவரும்!
மயக்கமுடன் தங்கினர் அங்கு.
சாலினி கண்ணகியை அங்கே எயினருக்குக்
காட்டினாள் போற்றினாள் காண்.
புகழுரையைக் கேட்டதும் கண்ணகி, நாணம்
அகமேந்த நின்றாள் குனிந்து.
கோவலனின் பின்னே ஒளிந்தேதான் நின்றிருந்தாள்
கோமகள் புன்னகை பூத்து.
புறச்சேரி இறுத்த காதை!
இரவில் பயணிப்போம் என்றேதான் எண்ணி
களைப்புடன் காத்திருந்தார் காண்.
திங்கள் மறைவதற்கும் வெண்ணிலவு தோன்றவும்
துன்பமுடன் காத்திருந்தார் அங்கு.
விடிய விடிய நடந்தனர் மூவர்!
கதிரவன் வந்தான் விடிந்து.
காட்டிலே வாழ்கின்ற கோழிகள் கூவின!
கேட்டபடி சென்றனர் சேர்ந்து.
முப்புரி நூலணிந்தோர் ஊரருகில்
அப்புறத்தில் நின்றனர் பார்த்து.
கோசிகன் கூற்று
கோவலனைப் பார்த்தறிந்தான் கோசிகன்! இன்பமுடன்
ஆவலுடன் சொன்னான் மகிழ்ந்து.
கோவலனே! உன்தந்தை ஏவலரை நான்குதிக்கும்
ஏவியே தேடுகின்றார் இங்கு.
தந்தையின் சொல்கேள்! அதுதான் நலமளிக்கும்!
என்றுரைத்தான் கோசிகன் தான்.
கானகம் சென்றுவிட்ட ராமன் பிரிவாலே
வாடிய மாநகர் போல
உனது பிரிவால் புகார்நகர் இன்றோ
அனல்புழுவாய் ஆனது பார்.
மதுரைக் காண்டம் 3
மாதவி மடல்
கோவலனே! மாதவி தந்த மடல்தன்னை
வாங்க மறுத்துவிட்டாய் நீ.
மீண்டும் மடலெழுதித் தந்தனுப்பி உன்னிடம்
காணுமாறு சொன்னாள் அவள்.
படித்தான் தெளிந்தான்! பிழைசெய்தவன் நானே!
முடிவெடுத்தான் கோவலன் தான்.
தந்தையிடம். இம்மடலைக் காட்டுவாய் கோசிகனே!
தந்தான் மடலை களைத்து.
மதுரை தூரம் எவ்வளவு?
கொற்றவைப் பாடலைப் பாணருடன் கோவலனோ
நற்றமிழால் பாடினான் சேர்ந்து.
பாணரிடம் மதுரையின் தூரத்தைக் கேட்டான்!
தூரமில்லை,பக்கமென்றார் பார்த்து.
விடியல் பொழுதில் மதுரை நகரை
துதித்தே நெருங்கினர் காண்.
அரண்மணை திக்கில் காலை முரசும்
உளங்கவர் வேதமும் வீரர்
முரசொலியும் யானை முழக்கமும் மற்றும்
பரியின் கனைப் பொலி
கிணப்பறை ஓசை வரவேற்க மூவர்
மனதால் மகிழ்ந்தனர் பார்த்து.

0 Comments:
Post a Comment
<< Home