கூண்டில் சிங்கம்
கூண்டில் அடைபட்ட சிங்கம்!
கூண்டில் அடைபட்ட சிங்கம்போல்
வாழ்கிறேன்!
வாழ்கையில் சிக்கல்கள் வந்துவந்து
தாக்கித்தான்
கூண்டாக மாறி வளைக்கிறதே
என்னைத்தான்!
ஏனெனக்குச் சோதனை தான்?
மதுரை பாபாராஜ்
*Lion Caged!*
Like a lion locked inside a cage,
I live!
Troubles come and come in life,
Attacking me again and again,
Turning into a cage,
That bends and breaks me!
Why only for me, these trials?
Madurai Babaraj
[27/10, 09:38] Vovramanujan: ஐயா, வணக்கம்!
'கூண்டில் அடைபட்ட சிங்கம்' என்கிற இந்த தலைப்பில் உள்ள தங்களின் உணர்வுகளை, யான் பலமுறைப் படித்துப் படித்து புரிந்து கொண்டேன். (பலமுறை என்பதற்கு காரணம் கவிதையின் நடையழகு! கருத்தழகு!)
சில செய்திகளுக்கு விடைகள், கண்ணெதிரே இருக்கும். சில செய்திகளுக்கு விடைகள், எங்கே - எப்போது - எப்படி வரும் என்று தெரியாமல் இருக்கும்.
தங்களைப் பொறுத்தவரையிலும், பல்லாண்டுகளாக பல்வேறு சிக்கல்கள் அடங்கிய தராசுத் தட்டின் வலுவான பகுதியில் தங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இன்னொரு புறம் சூழல்கள் தங்களுக்கு எதிராக அமர்ந்து மேல் நோக்கி ஆதிக்கம் செலுத்துகின்றது.
இவற்றை நான் நன்கு உணர்கின்றேன். ஐயா, இது ஒரு புறம் இருக்கட்டும்.
மற்றொரு புறத்திலே தங்களை நான் காணுகின்ற பொழுது, பெரும் ஞானியாராகத் தான் தெரிகின்றீர்கள். ஞான விளக்காகத் தங்களுடைய எண்ணத்தில் இருந்து புறப்படக்கூடிய கருத்துகள் - கவிதைகள் அனைத்தும் வெகு சிறப்பான வரலாற்றுப் பதிவைத் தருகின்றன.
அதனால் தாங்கள் எங்கோ அடைபட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று என்னால் எண்ண முடியவில்லை. தாங்கள் வெளி உலகத்தாரோடு தங்களுக்கே உரிய கவிதைக் கருவியுடன், சிறந்த சொல்லாடல்களுடன் அவ்வப்பொழுது தொடர்பு கொண்டு வருகின்றீர்கள்.
அதனால் தாங்கள் எப்படி இந்த வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. அதாவது தராசுத் தட்டுகள் ஒருபுறம் வலிகளினால் கீழே இறங்கினாலும், மறுபுறம் தங்களின் சாதுரியத்தால் - சிறந்த அறிவினால் எதிர்ப்புறத் தட்டிலே அமர்ந்து அதனை சமன்படுத்துகிறீர்கள். இந்த சமன்படுத்துகிற தன்மை தான், தங்களுக்கே உரிய சிறந்த பெருமை மிகுந்த - அழகு மிகுந்த செய்தியாகும்.
இப்படித் தாங்கள் அழகான கோவிலாக இருக்கக் கூடிய வீட்டை, வலம் வந்து கொண்டு எந்த பிரச்சனைகளையும் எதிர்நோக்கி சமாளித்துக் கொண்டு வருகிறீர்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
பொதுவாக எந்த ஒரு நிகழ்வும் இமைப்பொழுதில் மாறக்கூடிய நிகழ்வுகளாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். காலம் எப்பொழுதும் தொடர்ந்து ஒரே திசையில் பயணிப்பது இல்லை காற்று உட்பட.
மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது. தங்களுக்கு நான் நம்பிக்கை ஊட்டுவதாக - ஊட்டுவதற்காக சொல்லவில்லை. இதுதான் உண்மை!
மாறி மாறி வரக்கூடியச் சூழல்களை, தற்காலச் சூழல்களை, இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற சூழல்களை அணுகி அணுகி, அரைத்து அரைத்து, வயிற்றிலே உண்டு அதனை செரித்து சிரித்து தள்ளி விட வேண்டியது ஒன்றுதான் நம்முடைய கடமை.
எத்தனையோ மாந்தர்கள் தங்களின் நாட்டிற்காகவும், மொழிக்காகவும், இனத்திற்காகவும் பல்வேறு கோணங்களில் தன்னலம் இல்லாத ஒரு சூழல்களால் அவர்கள் அடைபட்டு கிடந்திருக்கின்றார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் தாங்கள் தங்களின் குடும்பசா சூழல்களால் இப்படி அமர்ந்திருக்கின்றீர்கள். பரவாயில்லை! ஏற்றுக் கொள்ளுவோம்!
இயற்கையின் செயல்கள் எப்பொழுதும் நமக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. அல்லது நாமும் இயற்கைக்கு மாறாக செல்லப் போவதுமில்லை. இணங்கி தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள்; இருக்கின்றோம்.
இது காலத்தால் வகுக்கப்பட்ட வினைப்பயன்! அமைதியாக - அழகாக - புன்சிரிப்போடு அப்படியே கடந்து செல்லுங்கள்.
வருங்காலம் தங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். மேடையிலே தங்களை எழில் பொங்க அமர்த்தி அழகு பார்க்கும்.
சிறப்பானப் புகழ், தங்களுக்கு பின்னால் காத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் - என்றைக்கும் தங்களுடைய கவிதைகள் பேசிக் கொண்டே இருக்கும்.
அதனால் மனக்கலக்கம் அடைய வேண்டாம். தாங்கள் ஒரு வன அரசனாக வாழ்க்கையை நடத்துங்கள்.
நாம் விரைவில் தங்களைச் சந்திக்க வருகின்றோம்.
மகிழ்ச்சி - அமைதி - புன்னகை இவற்றையே, நாம் அணிகலன்களாக கொள்ளுவோம்!
வெற்றி நமதே!
[27/10, 09:46] Madurai Babaraj: உங்கள் ஊக்கமே எனது ஆக்கம். தங்களைப் போன்ற நண்பரகள்தான் எனது உற்சாகம்.
எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு சூழ்நிலைகளை அறிந்துகொண்டு வழங்கும் ஆறுதலுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.
நன்றி நற்றமிழரே.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home