Sunday, March 29, 2026

கை--சூ

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

21 கைத்தொழில் போற்று

தனிமனித ஆற்றல் தழைக்கும் தொழில்கள்

கனிமரம் போல நற்பலன்  சேர்க்கும்!

வணிகம் நிரந்தரம்! ஏற்றமும் தாழ்வும்

மனிதனின் ஆற்றலைச் சார்ந்து


பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

22 கொடுமையை எதிர்த்து    நில்.


முன்னேறிச் செல்லும் எறும்பைத் தடுத்துப்பார்

தன்வழி மாற்றி முயற்சித்தே முன்னேறும்!

உன்வழியில் இங்கே தடைக்கல்லா? சிக்கலை

என்றும் அறவழியில் தாண்டு.


23 கோல்கைக் கொண்டு வாழ்


இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்

எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ

அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்

அச்சமின்றி சொல் நிமிர்ந்து.


24 கவ்வியதை விடேல்


நல்லவராய் வல்லவராய் வாழ்வில் உயர்த்துகின்ற

நல்ல குணங்களை எந்த நிலையிலும்

தள்ளிவைக்க எண்ணாமல் எப்பொழுதும் பின்பற்று!ச

தெள்ளமுத்ச் சுவைதான் வாழ்வு.


25  சரித்திர தேர்ச்சி கொள்


இல்லத்தின் பின்னணியும் நாட்டின் வரலாறும்

தெள்ளத் தெளிவாகக் கற்றுத் தெளியவேண்டும்!

கல்வியைத் தாண்டி அறிந்துகொண்டால் நல்லது!

இவ்விரண்டும் வாழ்வின் துணை.


26 சாவதற்கு அஞ்சேல்


நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்

இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!

எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!

எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை

இவ்வுலக வாழ்வின் உயிர்.


27  சிதையா நெஞ்சுகொள்


நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு

நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்

அலைபாயும் போக்குகளை விட்டே மனதை

நிலைப்படுத்தி வாழப் பழகு.


28  சீறுவோர்ச் சீறு


கனலாய்ச் சினங்கொண்டு சீறினால் நீயோ

புனலாக மாறித்தான் அன்பாலே சீறு!

அனலணைந்தே ஆறும் சினந்தான்! நாணும்

மனத்தால் திருந்துவார் பார்.


29  சுமையினுக்கு இளைத்திடேல்


பொறுப்பும் கடமையும் வாழ்வின் விழிகள்!

கடுக்காய் கொடுக்காமல் ஏற்றுச் சுமந்தால்

மிடுக்குடன் வாழலாம்! தட்டிக் கழித்தால்

சுடுமணல் பாலைதான் வாழ்வு.


30  சூரரைப் போற்று


விளக்கம் 

சூரியனைப் போற்று.

----------------------------------+------

பகலவனின் வன்கதிரை ஓசோன் படலம்

கடமையாய் நாளும் வடிகட்டி பாரை

இதமாகக் காப்பதற்குத் தோள்கொடு! மாசால்

கறைப்படுத்தி வாழ்ந்தால் மண்ணுலக வாழ்க்கை

முறைசிதைந்து போகும்! பகலவனைப்போற்ற

சிறைவைக்கும் மாசைத்  தவிர்.


0 Comments:

Post a Comment

<< Home