Tuesday, October 20, 2026

தாத்தா பாட்டி



ஓடி விளையாடு பாட்டி!

-----------------&--------------------------

ஓடி விளையாடு பாட்டி--நீ

ஓய்ந்திருக்க லாகாது பாட்டி!


பேரனையும் பேத்தியையும்

 பாத்துக்கணும்

பேணிப் பேணி முறையாக

வளர்க்கவேணும்

தலைசீவி பவுடர்பூசி

பொட்டுவச்சு

சளைக்காம சீருடைய போட்டுவிட்டு

சிற்றுண்டி தருவதற்கு பாட்டிவருவா

சின்னப்பயல் ஓடிஓடி லூட்டிதருவான்!

செல்லமான கோபத்தோடு அதட்டினாலும்

செல்லக்குட்டி குழந்தைக்கு ஊட்டிவிடுவா!

மாலையிலே பள்ளிவிட்டு வந்தவுடனே

மனங்குளிர முத்தமிட பாட்டிவருவா!

பள்ளிப் பாடம் அத்தனையும்

 சொல்லித்தருவா

பாடங்களை அத்துப்படி ஆக்கிவிடுவா!

நிலாவைத்தான் காட்டிகாட்டி சோறுதருவா

நேர்த்தியான பொறுமையுடன் பாட்டியிருப்பா

தூங்கவைக்க தாலாட்டுப் பாட்டுப்படிப்பா!

தினந்தோறும் இதைச்செய்தே வாழ்ந்துவருவா!

பாட்டியென்றால் குழந்தைகள்

 லூட்டியடிக்கும்!

பேரனுக்கும் பேத்திக்கும் பாட்டிபிடிக்கும்!


ஓடி விளையாடு தாத்தா!
---------------------------_------------------
ஓடி விளையாடு தாத்தா--நீ
ஓய்ந்திருக்க லாகாது  தாத்தா

காலையிலே பேரம்பேத்தி  பள்ளிக்கு
கவனமாக அனுப்பவேண்டும் தாத்தா
மாலையிலே பள்ளிவிடும் நேரத்திலே
மலைக்காமல் அழைக்கவேண்டும் தாத்தா!

வம்புசேட்டை சண்டித்தனம் பண்ணுவாங்க
மனதார பொறுத்துக்கணும் தாத்தா
கேலிபண்ணி சிரிப்பாங்க குழந்தைகள்
அத்தனையும் பொறுத்துக்கணும் தாத்தா!

ஓவியத்தைக் கத்துக்க கூடப்போகணும்
டியுசனுக்குப் போவாங்க அங்கநிக்கணும்
தாவித்தாவி கராத்தேக்குப் போனாலும்
தத்தித்தத்தி தாத்தாதான் கூடப்போகணும்

கண்ணயர்ந்து படுத்தாக்க போதுமய்யா
கதைகேட்டு வந்துவந்து சிணுங்குவாங்க
எத்தனையோ தாத்தாக்கள் இப்படித்தான்
இன்பமான குழந்தைகளும் இப்படித்தான்!

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home