தேசத்தந்தையைப் பேசச் சொல்லுங்கள்!
(கவியரங்கக் கவிதை-07.10.07-வாசல் கவிதை அமைப்பு)
என்பெயரை வைத்தேதான் வணிகம் செய்வார்!
எண்ணற்ற வன்முறையில் வதையும் செய்வார்!
தனிமனித நல்லொழுக்கம் எல்லாம் போச்சு!
தரங்கெட்ட அரசியலே நாட்டின் மூச்சு!
தீண்டாமைக் குற்றங்கள் ஊற்றாய் ஊறும்!
தினவெடுத்த சாதிவெறி நதியாய் ஒடும்!
தூண்டிலிடும் மதவெறியோ புயலாய்ச் சீறும்!
தூண்டிலுக்குள் சிக்கவைத்து நாட்டைத் தாக்கும்!
குண்டுகளே துளைக்காத மேடைக் குள்ளே
கூடித்தான் அச்சமில்லை என்றே சொல்வார்!
வன்முறையின் கல்மழையில் நடந்நு சென்றேன்!
வந்தவழி ஒப்பிட்டேன் நொந்து நின்றேன்!
அகிம்சைக்கும் அமைதிக்கும் கொள்கை காத்தேன்!
அவையெல்லாம் கானலாச்சு நடுங்கிப் போனேன்!
அகங்குளிர சமத்துவத்தை மூச்சு என்றேன்!
அதனுடைய மூச்சைத்தான் நிறுத்தக் கண்டேன்!
புறங்குளிர காந்தியத்தைக் காப்போம் என்பார்!
அகத்திற்குள் நடைமுறைக்கே ஏற்கா தென்பார்!
முரண்பாட்டின் உருவமாக இயங்கக் கண்டேன்!
பூசணியை சோற்றினிலே மறைக்கக் கண்டேன்!
இதுதானா நான்வாழ்ந்த அருமை நாடு?
என்கனவு வீணாகிப் போன கூடு!
வறுமைக்கு மூடுவிழா நடத்தி னால்தான்
மகாத்மாவாய் வாழ்ந்ததற்கே அர்த்த முண்டு!
0 Comments:
Post a Comment
<< Home