பாட்டியம்மா!
பாட்டியம்மா வழ்ந்தபோது பந்தாடிப் பார்த்தவர்கள்
பாட்டியம்மா செத்தவுடன் கூடிநின்று--போட்டிபோட்டே
ஒப்பாரி வைக்கின்றார்! வேடிக்கை மாந்தர்கள்!
ஒப்புக்கா பாசம்?உறவு?
உயிருடனே வாழ்ந்தநாளில் சோறுபோட்டு வாழ்த்த
தயங்கிநின்ற கூட்டத்தார்! தாங்க--மயங்கிநின்ற
கோழைகள்,சொத்தைப் பிரித்தெடுக்க ஓடிவந்து
சூளுரைத்து மோதுகின்றார் பார்.
தங்களுடன் வைத்தேதான் காப்பாற்றிப் பார்ப்பதை
பொங்கும் சுமையென்றே எண்ணியோர்--எங்களுக்குப்
பங்குண்டு சொத்திலென்று கூப்பாடு போடுகின்றார்!
இந்தமனம் ஈனமனம் சொல்.
இருக்கின்ற நாளில் மனங்குளிரச் சோறு
தருகின்ற பொன்மனந்தான் உண்மை--கருகிக்
கரைந்தபின்பு மாவிருந்து வைத்தால் உலகம்
திரண்டே நகைத்திருக்கும் செப்பு.
0 Comments:
Post a Comment
<< Home