கறைபடிந்து வாழாதே!
========================
களியாட்டம் போட்டுக் கறைபடிந்த வாழ்வில்
குளிக்கின்ற மாந்தர் குணக்கேடர் ஆவார்!
அளிபோல நாளும் அடிக்கடி மாறும்
தெளிவற்றோர் காண்பார் இருள்.
==========================================
நாடே நகைக்கும்!
=================
மோசடி செய்து நிலத்தை அபகரிக்கும்
நீசத் தனத்தாலே நிம்மதி போய்விடும்!
வேடம் கலைகின்ற நாள்வரும் நேரத்தில்
நாடே நகைத்திருக்கும் பார்.
========================================
நாணம்!
===================
புள்ளென்றேன்! நானோ பறந்திடுவேன் என்றுரைத்தாள்!
தள்ளென்றேன்! தள்ளிநின்றால் வாட்டுவேன் என்றுரைத்தாள்!
எள்ளென்றேன்! சீறிச் சினந்திடுவேன் என்றுரைத்தாள்!
அள்ளென்றேன்! நாணினாள் அங்கு.
============================================================
மறப்பது தீது!
==================
வாய்ப்பே கிடைக்கவில்லை என்றே அலைகின்றார்!
வாய்ப்பைக் கொடுத்ததும் முன்னேறிச் செல்கின்றார்!
வாய்ப்புக் கொடுத்தவரை வாழ்த்தி வணங்கவேண்டாம்!
வாழ்வில் மறப்பது தீது.
===================================================
தரைமீது மீன்!
=================
உளச்சலின் தாக்கம் உருகிய தேகம்!
களைப்புடன் உள்ளத்தில் சோர்வும் தளரும்
நிலைகுலைய வைத்தே மயங்கிடச் செய்யும்!
தரைமீது மீனாவார் சாற்று.
=================================================
தொட்டால் கெடுக்கும்!
====================
கள்ளோ, மதுவோ எதுவெனினும் போதைதந்து
உள்ளத்தைச் சீண்டிவிடும்! தீண்டாதே -- நல்லவரைக்
கெட்டவராய் மாற்றித் தடுமாற வைத்துவிடும்!
தொட்டால் கெடுத்துவிடும்! சொல்.
===================================================
எதுவும் சொந்தமில்லை!
=========================
நாமே நமக்கிங்கே சொந்தமில்லை! ஆனாலும்
நாமோ பொருளனைத்தும் என்சொந்தம் என்றேதான்
வீணாக சண்டையைச் சச்சரவை உண்டாக்கி
ஈனமாக வாழ்கின்றோம் பார்.
=========================================
0 Comments:
Post a Comment
<< Home