Tuesday, December 06, 2016

மதுரையில் புட்டுத் திருவிழா
கதை

வைகையில் வெள்ளம் கரைபுரண் டோடியது!
கைபிசைந்து நின்றிருந்தான் பாண்டிய மன்னன்தான்!
வீட்டுக் கொருவர் கரைகட்டும் நற்பணியில்
நாட்டுக் குழைக்கவேண்டும் என்றே அறிவித்தான்!
வைகை நதிப்பகுதி ஆரவாரம் கொண்டது!
சைகையும் சத்தமும் ஒன்று கலந்தன!
புட்டைச் சுமந்துவிற்கும் நல்மனப் பாட்டியோ
உற்றமகன் இல்லையே என்றேங்கி வீற்றிருந்தாள்!
கூலியாள் வேண்டுமா! கூவியதைக் கேட்டதும்
தேவைதான் வாப்பா! எனச்சொன்னாள்! வந்தவனோ
கூலிவேண்டாம் புட்டுவேண்டும் கூலியாக என்றுரைத்தான்!
பூமனத்தாள் புட்டுதந்தாள்! புட்டுவாங்கித் தின்றவனோ
ஆனமட்டும் தூங்கினான் அங்கே படுத்தேதான்!
தூங்கியதைப் பார்த்ததும்
பாண்டியனின் ஆட்கள்
தூங்கிய ஆளைப் பிரம்பால் அடித்தனர்!
ஆங்கே அனைவரும் ஒன்றாய் அலறினர்!
மீண்டும் அடித்ததும் மக்கள் அலறினர்!
பாண்டியனும் ஓங்கி அடித்தான்! மன்னனும்
தானடி வாங்கியதாய் அங்கே துடித்துவிட்டான்!
சங்கரன் தான்வந்த காட்சியைக் காட்டினான்!
மன்னனும் நின்றான் வியந்து.

0 Comments:

Post a Comment

<< Home