Sunday, September 01, 2019

கருப்பு வெளிச்சம்!

அறியாமை என்னும் கருப்பு இருட்டை
அறிவின் வெளிச்சம் திருக்குறள் நீக்கும்!
அறம்பொருள் இன்பமென முப்பாலே வாழ்க்கை
சிறக்க வழிகாட்டு மாம்.

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைத்தால்
கனிந்துவரும் வாழ்வில் கருப்பின் நிழலோ
படராமல் நிம்மதி என்னும் வெளிச்சம்
துணிந்து படரும் உணர்.

வன்முறையின் வண்ணம் கருப்பு! தூண்டுகின்ற
எண்ணங்கள் மாய வலைதன்னில் சிக்கவைக்கும்!
பண்பழிந்து சிக்கியதும் வாழ்வில் வெளிச்சத்தை
என்றுகாண்பார்? செந்தமிழே! சொல்.

தீய வழியிலே சேர்த்த செல்வங்கள்
பாயும் வெளிச்சம் கருப்பாகும்! வந்ததைப்போல்
தேயும்! விரைந்தே மறையும்! உளைச்சல்கள்
நோயாய்த் துடிக்கவைக்கும் இங்கு.

வறுமையின் வண்ணம் கருப்பே! மனமோ
பொறுமை வெளிச்சத்தில் செம்மை நெறியில்
நிமிர்ந்தேதான் சந்தித்தால் அந்த நிலையைப்
புனிதமெனப் போற்றும் உலகு.

உழவின் நிறமே வெளிச்சம்! வறண்டு
மழையின்றிப் போனால் உழவே கருப்பு!
உழவர்கள் வாழ்வில் கருப்பு படிந்தால்
 உலகில் வெளிச்சந்தான் ஏது?

கருப்பு கவர்ந்திழுக்கும்! ஆனால் வெளிச்சம்
விருப்பு வெறுப்பின்றி நிற்கும்! உலகில்
கருப்பைத் தவிர்த்து வெளிச்சத்தை ஏற்றால்
அருமைதான் வாழ்க்கை உணர்.






0 Comments:

Post a Comment

<< Home