Sunday, November 17, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
கள்ளாமை--29
--------------------------------------------------------------
அடுத்தவர் பொருளைக் கவருதல் தப்பு
--------------------------------------------------------------------
தன்னை மற்றவர் இகழாமல்
வாழத் துடிக்கும் நல்லவர்கள்
மாற்றார் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் இன்றி வாழவேண்டும்!

அடுத்தவர் பொருளைத் திருடுகின்ற
எண்ணம் தீதின் நிழலாகும்!
திருட்டுச் செல்வம் கானல்நீர்!
உள்ளதும் அழிந்து மறைந்துவிடும்!

திருடிப் பிழைக்கும் வாழ்க்கையிலே
துன்பம் கொடிபோல் படர்ந்துவரும்!

பொருளைத் திருட நேரத்தைப்
பார்த்தே நிற்பவன் எண்ணத்தில்
அன்பும் அருளும் இருக்காது!

திருட்டுத் தனத்தால் வாழ்பவர்கள்
பேரா சையால் அழிந்திடுவார்!

அளவை அறிந்து வாழ்பவர்கள்
களவுத் தொழிலே செய்யமாட்டார்!

நேர்மை யாளர் நெஞ்சத்தில்
அறத்தின் ஆட்சி நிலைத்திருக்கும்!

பொய்மை, திருட்டில் வாழ்பவர்கள்
நெஞ்சில் வஞ்சகம் குடியிருக்கும்!

களவுத் தொழிலைச் செய்பவர்கள்
குற்றச் செருக்கில் அழிவார்கள்!

களவுத் தொழிலால் பழிபெருகும்!
செய்யாமல் வாழ்ந்தால் புகழ்பெருகும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home