Saturday, November 16, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்!
------------------------------------------------------------
தவம் -- 27
-------------------------------------------------------------------
உடல்வருத்தித் துறவறத்தைப் பின்பற்று
--------------------------------------------------------------------

துன்பம் தன்னைப் பொறுப்பதுவும்
தீங்கே செய்யா நற்பண்பும்
தவத்தின் தளங்கள் என்றுணர்வோம்!

வேட மற்ற நன்னெறிதான்
மாசே இல்லா தவவடிவம்!

வேட தாரிக் கும்பலென்றால்
தவமே இல்லை! இழிநிலைதான்!

துறவிகள் வாழ்வைக் காப்பதற்கே
இல்லறந் தன்னை ஏற்றவர்கள்
துறவறந் தன்னை மறந்தாரோ?

பகையை அடக்கி மாற்றிடவும்
நண்பரைத் தாங்கி உயர்த்திடவும்
தவத்தால் உலகில் முடியும்பார்!

இல்லறம் ஏற்றோர் தவமேற்று
வல்லவ ராக மாறிடலாம்!

தவத்தை ஏற்றோர் சான்றோர்கள்!
மற்றவ ரெல்லாம் பேராசை
வலையில் சிக்கிய வீணர்கள்!

பொன்னைச் சுட்டால் ஒளிபெருகும்!
துன்பத் தணலால் தவச்சான்றோர்
ஞானம் பெருகி ஒளிபெறுவார்!

பற்றை விலக்கி வாழ்வோரை
உயிரினம் அனைத்தும் வணங்கிநிற்கும்!

தவத்தின் வலிமை பெற்றவர்க்கு
சாவையும் வெல்லும் ஆற்றலுண்டு!

ஆற்ற லற்றோர் பலரானார்!
ஆற்ற லுள்ளோர் சிலரானார்!
தவம்செய் யாதோர் பலராக
உள்ளதே இதற்குக் காரணமாம்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home