Wednesday, April 08, 2020

உனக்கு நான் எனக்கு நீ

உனக்குநான் எனக்கு நீ!

வசந்தாவும் நானும்!

ஒவ்வொரு நாளும் நமக்காக! நம்மைக் காக்க!

தனித்திரு! விலகி இரு! வீட்டில் இரு!

காலை  7 1/2 முதல்  இரவு 9 1/2 முடிய!

காலைமணி ஏழரைக்கு நாம்விழிப்போம்
நாள்தோறும்!
காலைக் குளம்பி பருகி முடித்திடுவோம்!
சிற்றுண்டி செய்வதற்கு  இல்லாள்  அடுப்படிக்கு
சற்றே நகர்ந்திடுவாள்! நானோ தனிமையில்
சுற்றி தொலைக்காட்சி செய்திக்குள் மூழ்கிடுவேன்!
முற்றும் கொரோனவின் செய்திகள் புட்டுவைப்பார்!
சற்றுநேரம் பார்த்துவிட்டு பின்சென்று பைகளில்
குப்பையைச் சேகரித்து அஞ்சியஞ்சி சாலையில்
சுற்றுமுற்றும் பார்ப்பேன்! ஈகாக்கா காணவில்லை!
குப்பையைத் தொட்டியில் போட்டுவிட்டு வீடுநோக்கி
வெற்றியுடன் வந்திடுவேன் நான்.

வீட்டுக்குள் தூய்மைப் பராமரிப்பைப் பின்பற்றி
நாங்கள் இருவரும் இங்கே தயாராவோம்!
உட்கார்வேன் இல்லாள் அருகில் சோபாவில்!
சிற்றுண்டி சாப்பிடுவோம் சேர்ந்து!

மாத்திரைகள் உட்கொள்வோம்! மீண்டும் தொலைக்காட்சி!
ஊற்றாய் கொரோனா விவரங்கள்! எச்சரிக்கை!
ஆக்கபூர்வ நம்மரசின் வேண்டுகோள்கள்
பார்த்திருப்போம்!
தூக்கத்தைத் தூண்டி படுத்திருப்போம் 
நாங்கள்தான்!
ஆச்சுமணி ஒன்றென்றால் சாப்பாடு சாப்பிடுவோம்!
சாப்பிட்டு மீண்டும் தொலைக்காட்சி சுற்றுலா!
தூங்கும் முயற்சியில் மீண்டும் தனித்தனியாய்
நாங்கள் படுப்போம் முயன்று.

மாலைவேளை நாலரைக்கு காப்பி பருகுவோம்!
மீண்டும் செய்திகேட்கப் பார்ப்போம் தொலைக்காட்சி!
மாலையில் மீண்டும் அடுப்படிக்குள் செல்வாரகள்!
ஆனமட்டும் செய்வார் சமையல் இரவுக்கு!
ஆகும் மணியெட்டு! சாப்பாடு சாப்பிடுவோம்!
வேகமாய் ஒன்பதாகும் இங்கு.

தொலைக்காட்சி சுற்றுலா தன்னை நிறைவுசெய்து
ஒன்பதரைக்கு தூங்கத்தான் போய்விடுவோம் நாங்கள்தான்!
இப்படித்தான் ஒவ்வொரு நாளும் கழிகிறது!
எப்படியோ வாழ்வின் முகம்.

சுபா

சமையலை நன்கு முடித்துவிட்டு வீட்டின்
அறையில் பணிசெய்வாள் நாளும் தனித்து!
கடைகளுக்கு வாரம் ஒருமுறை சென்று
தடையின்றி வாங்கிவந்து சேர்ப்பாள் தனித்து!
இடைவெளி மேற்கொண்ட வாழ்க்கை தனிமைச்
சிறையில்தான் இன்றிங்கே பார்.

பேரன் சுசாந்த்

தேர்வு முடிந்தது! தானோ அறையிலே
ஆர்வமுடன் கைபேசி கொண்டு விளையாட்டில்
மூழ்கிடுவான்! பேசுவான் வந்துவந்து கொஞ்சநேரம்!
தானுண்டு வேலையுண்டு தான்.

ஊரடங்கு வீடடங்கு என்றே அரசுகள்
சூழலில் நம்மைநாம் காப்பதற்கே கொண்டுவந்தார்!
வீட்டில் உனக்குநான் மற்றும் எனக்குநீ
வாழ்க்கை நகர்கிறது பார்.

மதுரை பாபாராஜ்









0 Comments:

Post a Comment

<< Home