Tuesday, April 28, 2020

முத்தம் ஒரு தொடர்கதை!

பத்துமாதம் தாய்வயிற்றில் வாழ்ந்து வெளிவந்த
தன்மழலைப் பிஞ்சைத் தழுவிப் பெருமிதத்தால்
தன்கரங்கள் வாங்க மகிழ்ந்தே நெற்றியில்
தந்தாள்  முதல்முத்தம் தாய்.

கண்ணுங் கருத்துமாய் அல்லும் பகலுமே
மண்ணில் வளர்ச்சியைக் கண்டேதான் முத்தங்கள்
அன்புடன் தந்தேதான் பெற்றோர் மகிழ்ந்திருப்பார்!
நெஞ்சங்கள்  துள்ளும் மகிழ்ந்து.

குழந்தைகள் பெற்றோர்க்கும் பெற்றோர் மகிழ்ந்து
குழந்தைக்கும் முத்தங்கள் தந்தே சிரிப்பார்!
பருவம் நிலைமாற்றி வாழ்வில் விலக்கும்!
நெருக்கம் தவிர்ப்பார் நிதம்.

பணிக்களம் மற்றும் பலகளத்தில் சென்று
மணியான சாதனைகள் செய்து புகழின்
அணியில் மிளிர்வார்கள் கைமுத்தம்
ஊக்கம்
துணிச்சல் அளிப்பார் உவந்து.

திருமணக் கோலம் குழந்தைகள் ஏற்பார்.!
உருவாகும் இல்லறச் சுற்று! இணையர்
பரிமாறும் முத்தங்கள் ஆயிரந்தான் உண்டு!
களிப்பார் பலவகையில் இங்கு!

பேரன்கள் பேத்திகள் ஓடி விளையாடும்!
தாத்தாவும் பாட்டியும் போட்டிபோட்டு கூப்பிடுவார்!
பேரனோ பேத்தியோ ஓடிவந்து முத்ததால்
ஈரமாக்கி கன்னத்தில் தந்திடுவார் மாறிமாறி!
தாரணியில் உச்சமான இன்பப் பொழிவிதுதான்!
ஆரத் தழுவிடுவார் காண்.

தன்குழந்தை பின்பு அவரின்  குழந்தைகள்
என்றேதான் முத்தங்கள் மாறி உருப்பெற்று
மண்ணுலகில் தாய்தொடங்கி தாரம் வளர்ந்திட
அன்பான பேரக் குழந்தைகள் முத்தங்கள்
என்றே தொடர்கதைதான் இங்கு.

மதுரை பாபாராஜ்









0 Comments:

Post a Comment

<< Home