Monday, July 20, 2020

பூங்கா போன்றதே வாழ்க்கை!

பூங்காவில் எண்ணற்ற வண்ணவண்ணப்  பூவினங்கள்
காலைப் பொழுதில் மலர்ந்தே மணம்பரப்பும்!
ஆங்காங்கே ஓங்கி உயர்ந்த மரங்களில்
தேனிசை மீட்டும் பறவைகள் நின்றிருக்கும்!
மாலைப் பொழுதில். மலரினங்கள் வாடிநிற்கும்!
கூடுநோக்கிப் போகும் பறவை பறந்தேதான்!
கோலங்கள் மாறும் உணர்.

மழைபெய்தால் எல்லாம் நனையும்! வெய்யில்
அனல்பெய்தால் காய்ந்தே சருகாகும்!
எல்லாம்
புனல்தேடிப் புத்துணர்ச்சி காண்பதற்கே ஏங்கும்!
சுணங்கும் தழைக்கும் நிலை.

புயலடித்தால் சாயும் மரங்கள்! செடிகள்!
புயல்வெள்ளம் சூழ்ந்தால் நீரில் மூழ்கும்!
புயலடித்தே ஓய்ந்தால் மீண்டும் நிமிரும்!
கலக்கம் விலகும் தெளிந்து.

வசந்தகாலம் என்றால் மகிழ்ச்சிதான் எங்கும்!
இலையுதிர் காலமா கீழே உதிர்ந்த
இலைகள் சலசலக்கும்! காணும் மரங்கள்
இலையின்றி காட்சி தரும்.

குழந்தைகள் வந்து விளையாடும் நேரம்
குழந்தையாய் நாமங்கே மாறி மகிழ்வோம்!
குழந்தை அடம்பிடிக்கும் கண்டிப்போம் ஆனால்
குழந்தைகள் வெற்றிகாணும்  பார்.

ஆண்டு முழுவதிலும் மாறிமாறி ஏற்கின்ற
கோலங்கள் எல்லாம் சுழற்சி முறையில்தான்!
வாழ்க்கையும் பூங்காபோல் கோலங்கள் மாறிமாறிப்
பார்க்கவைத்தே பாடம் புகட்டிநிற்கும் நாள்தோறும்!
நாமோ நகர்கின்ற காய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home