Saturday, October 31, 2020

மருத்துவர் புகழகிரி


 மதுரை வடமலையான் மருத்துவ மனை மருத்துவர் புகழகிரி அனுபவம்!


இறைநம்பிக்கையும் அனுபவமும்!


1

பன்முக ஆற்றல்கள் கொண்ட மருத்துவர்

வண்டமிழ் மாமதுரை தன்னில் புகழ்மணக்கும்

பன்முக சேவை மருத்துவக் கூடத்தை

நன்கு நடத்திவரும் ஆற்றலாளர் என்றாலும்

தன்னுடல் நோய்க்குக் கோவை மருத்துவ

நண்பரின் கூடத்தில் நாளும் சிகிச்சைகள்!

பண்பாளர் மாரியம்மன் பக்தர் மனம்கசிந்தே

அங்கிருந்து வேண்டுகின்றார் தன்னூர் மதுரையில்

வண்டியூர் தெப்பக் குளமாரி யம்மனைத்தான்!

அன்பும் அருளும் துணை.


2

குடலிறக்க சிக்கல் அறுவை சிகிச்சை

தடம்மாறி தோற்க செயற்கை சுவாசம்

பொருத்த மருத்துவர்கள் முன்வந்த போது

மருத்துவரின் இல்லாள் மயங்கி  விழுந்தார்!

மருத்துவரோ தன்னிலை விட்டே ஒளியைத்

தொடர்ந்தேதான் சென்றாராம் பெற்றோரைப் பார்த்தார்!

தொடர்ந்த  அனுபவத்தைக் கேள்


3

தொடர்ந்தபோது அம்மாதான் என்னைத் திரும்பி

நடந்துபோ வந்த வழியே எனச்சொன்னார்!

நடந்துவந்தேன் மீண்டும் உடலுல் புகுந்தேன்!

செயற்கைச் சுவாசக் கருவியைக் கண்டேன்!

அயர்வில் மனைவியோ கைகூப்பிப் பார்த்தே

அழுததைப் பார்த்தபோது கண்முன்னே அங்கே

தொழுதேன்நான் மாரியம்ம னைப்பார்த்து! வாழ்க்கை

பழுதாக நொந்தேனே தந்தைபோன பின்பு!

குலக்கொழுந்தாம் பிள்ளைகள் அந்தநிலை காண

உளம்சகியேன்! என்னைக் குணப்படுத்து தாயே!

நலம்நாடி வேண்டினேன் நான்.


4.

செய்த அறுவை சிகிச்சையை தோல்வியாம்!

செய்யவேண்டும் மீண்டும் அறுவை சிகிச்சையென்றார்!

கையெடுத்துக் கும்பிட்டே இல்லாள் வேண்டினார்:

அய்யா அவரிங்கே வந்தார் நடந்தேதான்!

நல்ல முறையில் அவரைக் குழந்தைகள்

எல்லோரும் பார்க்கவேண்டும் என்றேதான் கெஞ்சினார்!

வேறோர் மருத்துவக் கூடத்தை நோக்கித்தான்

கோவையில் ஆம்புலன்சில் கொண்டுசென்றார் என்னைத்தான்!

நேரமோ என்னவோ அங்கேயும் தோல்விதான்!

மீண்டும் அறுவை சிகிச்சை எனச்சொன்னார்!

காலத்தை நொந்தோம் இணைந்து.


5

வேண்டாம் அறுவை சிகிச்சை எனச்சொன்னேன்!

நானுடனே பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்றதும்

ஆம்புலன்சில் ஏற்றி சுவாசக் கருவியுடன்

நாங்கள் மதுரைப் பயணத்தை மேற்கொண்டோம்!

நாங்கள் மதுரைமண்ணைத் தொட்டமும் என்னுள்ளே

ஏதோ இனம்புரியா நல்லுணர்வை நானுணர்ந்தேன்!

மாரியம்மன் மீனாட்சி தாயின் அருள்கிட்டும்!

ஊறியது நம்பிக்கை உள்ளத்தில் நிம்மதிதான்!

நாடினேன் எந்மன் மருத்துவக் கூடத்தை!

சூழ்ந்துநின்று எங்கள் மருத்துவர்கள் மீண்டுமங்கே

நோய்க்கு அறுவை சிகிச்சையைச் செய்தனர்!

மூன்றுநான்கு நாளாகும் என்றனர்! எல்லோரும்

தூங்காமல் கொள்ளாமல் காத்திருந்தார் சுற்றித்தான்!

ஏங்கவைத்த கோலத்தில் நான்.


6

பலநாள்கள் போராட்டம்! பிள்ளைகளைப் பார்த்த

நிலையின் திருப்தியில் வாழ்ந்தேன்! மீண்டும்

நலம்பேண வீடுவந்து சேர்ந்தேன் மகிழ்ந்து!

உளத்திலே மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல

விழைந்தபோது சக்கர நாற்காலி யோடு

அழைத்தேதான் சென்றார் மனைவியும் என்னை!

நுழைந்தோம் வளாகத்தில் அம்மனின் பாதம்

முதலிலே கண்களில் பட்டது! அம்மா

ககனத்தை ஆள்வதும் நீயேதான் என்றும்

அகங்குளிர ஆட்டுவித்துப் பார்ப்பதும் நீதான்

மகத்தான உன்னிடத்தில் வந்துவிட்டேன் என்றேன்!

அகம்சிலிர்த்து மெய்மறந்தேன் நான்.


7

சோதனைகள் வேதனைகள் சூழ்ந்தபோது என்மனைவி

சாதனைக்கு நம்பிக்கை தந்தே துணைநின்றார்!

தெப்பக் குளத்தின்  மாரியம்மன் பேரருளால்

நற்றமிழ் மாமதுரை மீனாட்சி பேரருளால்

திண்டுக்கல் கோட்டையின் மாரியம்மன் பேரருளால்

இங்கே உயிர்ப்பிச்சை பெற்றே எழுந்துவிட்டேன்!

தொண்டு தொடரவேண்டும் அம்மன்கள் கட்டளை!

என்றும் தொடர்ந்திருப்பேன் தொண்டு.


மதுரை பாபாராஜ்








0 Comments:

Post a Comment

<< Home