Saturday, November 07, 2020

வீரமங்கை வேலு நாச்சியார்

 ஆங்கிலேயரை எதிர்த்து

சிவகங்கைச் சீமையை மீட்ட

வீரமங்கை வேலு நாச்சியார்!


(1730--1796)


நாச்சியார் பெண்ணெனினும் ஆண்போல் வளர்ந்தார்!

வாள்போர்ப் பயிற்சி ஆயுதம் ஏந்துதல்

வீரப் பயிற்சிகள் பெற்றார்! பன்மொழி

ஆற்றலுடன் கற்றறிந்தார் முத்து வடுகருக்கு

ஏற்ற மனவியானார் வேலு.


ஆங்கிலேயர் போர்ப்படையைச் சந்திக்க

எண்ணினார்!

மாறினார் திண்டுக்கல் பக்கம் விருப்பாட்சி

கோட்டையில் தங்கி ஹைதரலியைச் சந்தித்தார்!

ஊற்றாய் உருதுமொழி பேசி விளக்கினார்!

போற்றினார் மன்னர் உதவிட முன்வந்தார்!

ஊக்க மளித்தது பேச்சு.


ஏழாண்டு காலங்கள் கோட்டைகள் கோட்டையாய்

மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தார்! தன்மகளைக்

காக்கும் பொறுப்புடன், அங்கே படைதிரட்டி

நாட்டையே காக்கவந்தார் பெண்.


மருது உடன்பிறப்பு வீரத் தலைமை

பெருமிதங் கொண்டதே

இத்தகைய போரில்

பெரும்பங்கை ஆற்றி உறுதுணையாய் நிற்க

வரலாறு காண விழைந்து.


திண்டுக்கல் விட்டு சிவகங்கை நோக்கியே

திண்தோள் படையொன்று வீரமங்கை நாச்சியார்

வீரத் தலைமையில் சென்றது! ஐதரலி

வீரர் படையுடன் பீரங்கி சேனையும்

போர்ப்பரணி பாடவே காளையார் கோயிலை

ஆர்ப்பரித்து வெற்றிபெற்றாள் மாது.

பாரே வியந்தது பார்த்து.


காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட

ஆடுமேய்க்கும் பெண்ணாம் உடையாள் நினைவாக

வீரக்கல் நட்டார்! திருமாங் கல்யத்தைக் 

காணிக்கை ஆக்கிச் செலுத்தினார் அஞ்சலி !

மாதிவள் வீரமங்கை தான்.


சின்ன மருது, பெரிய மருது,

குயிலி தலைமையில் சென்ற படையோ

சிவகங்கைச் சீமை அரண்மனைக்குள் பெண்கள்

படையொன்று மாறுவேடம் பூண்டு குயிலி

உடம்பிலே தீவைத்து வெள்ளையர்க் கான

மகத்தான ஆய்தக் கிடங்கை எரித்தாள்!

அகங்குளிர்ந்தாள் வெற்றியைக் கண்டு.


வேலுநாச்சி தன்கணவர் தன்னைக் கொலைசெய்த

ஜோசப்ஸ்மித் மற்றும் தளபதியாம் பான்ஜோர்

ஆகியோரைத் தோற்கடித்தார்! நாச்சியார் பேத்தியின்

சாவால் துயருற்றார்! அங்கே விருப்பாட்சி

ஊரின் அரண்மனையில் தங்கினார்! போரிட்டு

நாட்டையே மீட்டளித்த நாச்சியார் காலமானார்!

போற்றி வணங்குவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்






 .


0 Comments:

Post a Comment

<< Home