Saturday, December 05, 2020

12 நடுவுநிலைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


12. நடுவுநிலைமை!

குறள் 111:

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட் டொழுகப் பெறினென்றார் அய்யன்!

ஒருதலைச் சார்பின்றி நீதி வழங்கும்

நடுநிலையே வாழ்வின் அறம்.

குறள் 112:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்தென்றார் வள்ளுவர்!

எப்போதும் நீதிமானின் செல்வம் தலைமுறையை

வற்றாமல்  காக்கும் உணர்.

குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடலென்றார் வள்ளுவர்!

என்றும் நடுநிலையை விட்டால் வளம்சேரும்

என்றால் வளம்தவிர்த்தல் நன்று.

குறள் 114:

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படுமென்றார் வள்ளுவர்!

கெட்டவரா? நல்லவரா? சென்றபின் எஞ்சிநிற்கும்

நற்புகழும் மாப்பழியும் சான்று.

குறள் 115:

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணியென்றார் வள்ளுவர்!

வாழ்வதும் தாழ்வதும் வாழ்வின் இயல்பாகும்!  

கோடாமை சான்றோக் கழகு.

குறள் 116:

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயினென்றார் அய்யன்!

நடுநிலை விட்டுப் பிறழ்வதே இங்கே

கெடுதிக்(கு) அறிகுறி யாம்.

குறள் 117:

கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வென்றார் அய்யன்!

நடுநிலைப் பண்பாளர் தாழ்வினை என்றும்

கெடுதியாகப் பார்க்கா( து)  உலகு.

குறள் 118:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணயைன்றார் அய்யன்!

துலாக்கோலைப் போல நடுநிலை போற்றல்

உலகிலே சான்றோர் சிறப்பு.

குறள் 119:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறினென்றார் வள்ளுவர்!

உள்ளம் ஒருபக்கம் சாயாமல் நீதியைக் காப்பதே

நல்லோர் நடுநிலை யாம்.

குறள் 120:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயினென்றார் வள்ளுவர்.

நுகர்வோர்போல் எண்ணி வணிகத்தைச் செய்தல்

வணிகநெறி யாகும் உணர்.





































0 Comments:

Post a Comment

<< Home