15.பிறனில்விழையாமை
குறள்களுக்குக் குறள்வடிவில. கருத்து!
15.பிறனில்விழையாமை
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்லென்றார் அய்யன்!
பிறன்மனை நாடும் கயமை,
அறநூல்
அறிந்தோர் விழையமாட்டார் சொல்.
குறள் 142:
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்லென்றார் அய்யன்!
பிறன்மனை நாடுகின்ற குற்றத்தைச் செய்வோர்
அறம்பிறழ்ந்த கீழோர்க்கும் கீழ்.
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வாரென்றார் அய்யன்!
புறத்திலே நட்பும் உளத்தில் துரோகம்
உடையோர் நடைப்பிணந் தான்.
குறள் 144:
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகலென்றார் அய்யன்!
பிழையென் றறிந்தும் பிறன்மனை நாடல்
குணக்குன் றெனினும் பிணம்.
குறள் 145:
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழியென்றார் அய்யன்!
எளிதாய்ப் பிறர்மனையைத் தீண்டலாம் என்னும்
கழிசடையைத் தீண்டும் பழி.
குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்ணென்றார் அய்யன்.
பகைதீமை அச்சம் பழியென்றும் நீங்கா
பிறன்மனை நாடுவோனை விட்டு.
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவனென்றார் அய்யன்!
பிறன்மனை நாடாத பண்பாளன் மட்டும்
அறங்காக்கும் இல்லறத்தா னாம்.
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கென்றார் அய்யன்!
பிறன்மனையை நாடாத சான்றாண்மை ஒன்றே
அறமும் ஒழுக்கமு மாம்.
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தாரென்றார் அய்யன்!
கடல்சூழ் உலகத்தின் நன்மைகள் எல்லாம்
பிறர்மனைத் தோள்சேரா தார்க்கு.
குறள் 150:
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்றென்றார் அய்யன்!
பிறன்மனை நாடும் செயலோ அறத்தின்
நெறிமறத்தல் வாழ்வினும் தீது.
0 Comments:
Post a Comment
<< Home