Wednesday, December 30, 2020

49 காலமறிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

49 காலமறிதல்

குறள் 481:

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


பகல்பொழுதில்  கோட்டானைக் காகமோ வெல்லும்!

பகைவெல்லக் காலத்தைப் பார்.

குறள் 482:

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.


பருவத்தில் செய்யும் செயல்கள் வளத்தை

நிலையாகக் கட்டும் கயிறு.

குறள் 483:

அருவினை யென்ப உளவோ கருவியாற்

கால மறிந்து செயின்.


கருவியுடன் கால மறிந்தேதான் செய்தால்

பெருஞ்செயலும் செய்தல் எளிது.

குறள் 484:

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.


காலம் இடமறிந்து செய்வதைச் செய்துவிட்டால் 

ஞாலம் வசப்படும் இங்கு.

குறள் 485:

காலங் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்.


காலம் கனியுமட்டும் காத்திருப்பார் 

ஞாலத்தை

ஆள்வதற்கே எண்ணுவோர் தான்.

குறள் 486:

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.


ஊக்கமுள்ளோன் பின்வாங்கிச் செல்தல்

கடாஒன்று

தாக்கிடப் பின்செல்தல் போல்.

குறள் 487:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.


உள்ளத்தில் கோபம் இருந்தாலும் காலநேரம்

துல்லியமாயப் பார்த்தே அறிவுடையார் 

கோபத்தை

அள்ளித் தெளிப்பார் கனன்று.

குறள் 488:

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை

காணிற் கிழக்காந் தலை.


பகைவருக்கு நேரம் வரும்வரை காத்தால்

பகைவரே வீழ்வார் கவிழ்ந்து.

குறள் 489:

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.


செயற்கரிய செய்ய பொறுத்திருந்து காலம்

துலங்கியதும் செய்தல் அறிவு.

குறள் 490:


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.


கொக்குபோல் காத்திருந்து வாய்ப்பு வரும்போது

கொத்திப் பயன்படுத்தப் பார்.


மதுரை பாபாராஜ்


































0 Comments:

Post a Comment

<< Home