Monday, December 28, 2020

45 பெரியாரைத் துணைக்கோடல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

45 


குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


45 பெரியாரைத் துணைக்கோடல்


குறள் 441:


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.


அறிவார்ந்த சான்றோரின் நட்பை, திறமை

அறிந்தே தெரிவுசெய்தல் நன்று.


குறள் 442:


உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.


தற்பொழுது துன்பத்தை நீக்கி வரும்துன்பம்

பற்றாமல் காப்போரை நாடு.


குறள் 443:


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.


பெரியவர்களைப் போற்றியே தக்கவைத்துக் கொள்ளல்

பெரும்பேறாம் வாழ்வில்! உணர்.


குறள் 444:


தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.


தன்னைவிட  அறிவிற் சிறந்த பெரியாரின்

பண்புவழி செல்தலே நன்று.


குறள் 445:


சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.


சூழ்ந்திருக்கும் சான்றோர்கள் ஆள்வோரின் கண்களாகும்!

ஆள்வோர் துணைக்கொள்ளல் நன்று.


குறள் 446:


தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.


தக்கவரை ஏற்றே அவர்வழியில் சென்றிருந்தால்

எப்பகையும் தீண்டாது சாற்று.


குறள் 447:


இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.


இடித்துரைத்து நற்றுணை யாவோர் வழியில்

நடப்போர்க்குக் கேடுசெய்வார் யார்?


குறள் 448:


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.


இடித்துரைக்க அஞ்சுவோர் சூழ்ந்திருந்தால் ஆட்சி

முடிச்சவிழ்ந்த நெல்லிமூட்டை தான்.


குறள் 449:


முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.


முதலில்லை என்றால் வரவில்லை! தாங்கும்

அகமற்றோர் சூழ்ந்திருந்தால் நன்மை இல்லை!

தடைவந்தால் தக்கதுணை நன்று.


குறள் 450:


பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.


நல்லார் தொடர்பைத் தவிர்த்தல், பலரது

தொல்லையைத் தேடலினும் கேடு.


மதுரை பாபாராஜ்














0 Comments:

Post a Comment

<< Home