Sunday, December 27, 2020

41 கல்லாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


41 கல்லாமை

குறள் 401:


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.


அரங்கின்றி சூதாடல் போல அறிஞர்

அரங்கில் கல்லாதார்  பேச்சு.


குறள் 402:


கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.


கல்லாதார் கற்றவர்முன் சொல்தலோ பக்குவம்

இல்லா பருவத்துப் பெண்மீது மையலைக்

கொள்வது போலாம் உணர்.


குறள் 403:


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.


கல்லாதார் நல்லவரே கற்றவர் கூட்டத்தில் 

தள்ளிநின்று பேசாதார் இங்கு.


குறள் 404:


கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்

கொள்ளார் அறிவுடை யார்.


கல்லாதார் கற்றவர்முன் பேசினால் கற்றவர்

கல்லாரை ஏற்கமாட்டார் கூறு.


குறள் 405:


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.


கற்காமல் கற்றவர்முன் பேசினால் மெய்த்தன்மை

சட்டென்று காட்டிவிடும் சாற்று.


குறள் 406:


உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.


இருப்பதுபோல் தோற்றமுள்ளோர் கல்லாத மாந்தர்!

களர்நிலத்திற் கொப்பாவார் சாற்று.


குறள் 407:


நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று.


ஒன்றுமே கற்காமல் தோற்றப் பொலிவுள்ளோர்

மண்பொம்மைக் கொப்பாவார் காண்.


குறள் 408:


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.


நல்லவரை வாட்டும் வறுமையினும் கல்லாதார்

செல்வம் மிகவும் கொடிது.


குறள் 409:


மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு.


மேலோரா? கீழோரா? கல்விப் பெருமை

யால்வரும் நற்புகழால் தான்.


குறள் 410:


விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.



உலகிலே கற்றவர் கல்லாதார்க் குள்ள

நிலைகளின் வேறுபாடே மாந்தருக்கும் காட்டு

விலங்கிற்கும் உள்ளதென்று செப்பு.


மதுரை பாபாராஜ்



















































0 Comments:

Post a Comment

<< Home