43 அறிவுடைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
43 அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
அறிவே பகைவரைத் தாக்கும் கருவி!
பகையழிக்க வொண்ணா அரண்.
குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
கண்டபடி வாழாமல் நல்வழியைக் காட்டுகின்ற
பண்பின் விளக்கே அறிவு.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருளை யார்சொன்ன போதிலும்
மெய்ப்பொருளை
உற்றுநோக்கும் ஆற்ற லறிவு.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
சொல்வதை மற்றவர்கள் ஏற்குமாறு சொல்வதும்
சொல்பவரின் சொற்களை ஆய்ந்து தெளிகின்ற
வல்லமையும் கொண்ட தறிவு.
குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.
உயர்ந்தோரை நட்பாக்கி இன்பதுன்பம் என்ற
இரண்டு் நிலையைச் சமமாகப் பார்க்கும்
தரமான பண்பே அறிவு.
குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
இவ்வுலகில் சான்றோர்கள் எவ்வழி வாழ்கின்றார்
அவ்வழி வாழ்தல் அறிவு.
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையார் பின்விளைவைச் சிந்திப்பார்! நாளும்
அறிவிலார் சிந்திப்ப தில்.
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்சுவதற்கு அஞ்சாமல் வாழ்தல் அறியாமை!
அஞ்சுதல் சான்றோர் செயல்.
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
வருமுன்னே காக்கும் அறிவிருந்தால் துன்பம்
துரும்பாகும் சந்திப்பார் சாற்று.
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
அறிவிருந்தால் எல்லாம் இருப்பவராம்! மாந்தர்க்( கு)
அறிவில்லை என்றாலோ என்ன இருந்தும்
எதுவுமற்றோர் ஆவார் உணர்.
0 Comments:
Post a Comment
<< Home