Sunday, December 27, 2020

42 கேள்வி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


42 கேள்வி

குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.


நல்ல கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்

செல்வத்திற் கீடில்லை வேறு.

குறள் 412:

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.


செவிகளுக்(கு)இன்சொல் உணவில்லை என்றால்

வயிற்றுக் குணவளிப்போம் கூறு.

குறள் 413:

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.


செவியுணவாம் கேள்விஞானம் கொண்டவர்கள் வேள்வித்

தெளிவுள்ள ஆன்றோர்க் கிணை.

குறள் 414:

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

கொற்கத்தின் ஊற்றாந் துணை.


கல்லாதோர் கற்றவரைக்கேட்டுத் தெரிதல் நடைதளர்ந்து

தள்ளாடும் மாந்தருக்குக் கொம்பு.

குறள் 415:

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.


வழுக்கும் தரையிலே ஊன்றுகோல் போல

ஒழுக்கநெறி வாழ்வோரின் சொல்.

குறள் 416:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.


மனமொன்றி நல்லவை கேட்டால் பெருமை

உனக்குத்தான் வந்துசேரும் இங்கு.

குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.


நிறைவான கேள்விஞானம் உள்ளோர் மறந்தும்

அறிவற்றுப் பேசமாட்டார் இங்கு.

குறள் 418:

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.


கேள்விஞானம் இல்லாத மாந்தர் செவிகளோ

கேளாச் செவியென்றே கூறு.

குறள் 419:

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது.


நுண்ணிய கேள்விஞானம் இல்லாதோர்

என்றுமே

தன்னடக்கம் கொள்தல் அரிது.

குறள் 420:

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென்.


கேள்விச் சுவையொதுக்கி  வாய்ச்சுவை பின்னலைவோர்

வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்று.


மதுரை பாபாராஜ்







































0 Comments:

Post a Comment

<< Home