Friday, May 20, 2022

தூண்டல் நண்பர் ஜெயப்ரகாஷ்


நண்பர் ஜெயப்ரகாஷ் தூண்டுதலால்

விளைந்த கவிதைகள்!


🤗 *இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு

 கிட்டே இருக்கனும்,*


இட்லியைப் போல பளிச்சென வாய்விட்டு

எப்போதும் நாமோ சிரித்தால்தான் நல்லது!

நம்மைத்தான் தீண்டாது நோய்.


*🤗புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்,*


புரட்டிப் புரட்டி எடுத்தாலும் தோசை

முரண்டே பிடிக்காது நாமும் அதுபோல்

பொறுமையாய் வாழ்தல் சிறப்பு.


*🤗உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்,*


உள்ளேயோ ஒன்றுமில்லை! ஆனாலும் பூரியோ

கொள்ளை மகிழ்வுடன்  உப்பி இருக்குமே!

எல்லோரும் வாழ்வோம் மகிழ்ந்து.


*🤗அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்,*


அடையை நுகர்ந்ததும் விரும்புவார் இங்கே

தடையின்றி எல்லோரும்! நாமும் அதுபோல்

பிடித்தவராய் வாழவேண்டும் பார்.


*🤗ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்,*


வடையிலே ஓட்டை இருந்தாலும் பார்க்க

சுவைக்க கவர்ச்சிதான்! நாமும் அதுபோல்

கவர்ச்சியாய்த் தோன்றுதல் நன்று.


*🤗உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்,*


எத்தனைபேர் வந்தாலும்  உப்புமா கைகொடுக்கும்!

அப்படி நாமும் அவசரத்தில் மற்றவர்க்கு

எப்படியும் கைகொடுத்தல் நட்பு.


*🤗பொங்கல் மாதிரி குழைவா பேசனும்*


பொங்கலைப் போல குழைவா கனிவாக

உள்ளங் கவர உரையாடி வாழவேண்டும்!

பிள்ளைமனம் கொள்தல் இனிது.


*🤗அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்,*


அடிச்சுத் துவைக்கின்ற சூழலென் றாலும்

கதிகலங்கிப் போகாமல் என்றும் பரோட்டா

நிலைபோலத் தாக்குப் பிடி.



*🤗பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்,*


பிரியாணி என்றால் அலைமோதும் கூட்டம்!

பெரியவர் தொட்டுச் சிறியவர்கள் எல்லாம்

விரும்பும் அளவுப் புகழ்பெற்ற தைப்போல்

புகழுடன் வாழ்தலே வாழ்வு.


*🤗சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்,*


சப்பாத்தி என்றால் எளிமைதான்! தேய்த்துவரும்

சப்பாத்தி போல எளிமையைப் பின்பற்று!

எப்போதும் கம்பீரம் உண்டு.


*🤗ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது,*


சுற்றி வளைத்தால் வருமே ஜிலேபிதான்!

அப்படிக் காணும் ஜிலேபிபோல் இன்றி

சுற்றி வளைக்காமல் பேசு.


*🤗நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது,*


நூடூல்ஸ் மாதிரி சிக்கலாக வாழ்வானால்

தேடிவரும் சிக்கலுக்கே சிக்கலைத் தந்துவிட்டால்

ஓடிவிடும் சிக்கல் உணர்.


*பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது,*


பீட்சாவைப் பிய்த்தால் இழுபறிதான்! நாமிங்கே

பீட்சா இழுபறி் போல இருக்கவேண்டாம்!

வாழ்வில் இழுபறியைத் தூற்று.


*🤗புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது,*


புட்டை உதிர்த்தால் அனைத்துமே கொட்டிவிடும்!

உள்ளத்தின் துன்பத்தைக் கொட்டிவிட்டால் எல்லோரும்

எள்ளிநகை யாடுவார் பின்.


*🤗கேசரி மாதிரி இனிமையா பேசனும்,*


கேசரி போலத்தான் இன்சொற்கள் பேசவேண்டும்!

ஊடறுக்கும் வன்பேச்சை நாளும் தவிர்க்கவேண்டும்!

வேடமற்ற இன்சொல்லே பண்பு.


*🤗பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்,*


பாயசம் எல்லாம் சிறப்பான நாள்களில்

ஆர்வமுடன் தந்தே விருந்தளிப்பார்! நம்மையும்

பார்த்ததும் பார்ப்போர் மலைக்கவேண்டும் பாயசம்

வார்த்த சிறப்பாகத் தான்.



*🤗அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்,*


வந்தார் விருந்தினர் திடீரென்றே! ஆறுதலா

கைகொடுக்கும் அப்பளம்! அப்பளத்தைச் சுட்டுவைத்தால்

கைதட்டி உண்பார் களித்து.


*🤗அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்,*


காய்கறிகள் எல்லாம் கலந்தே அவியலை

ஆர்வமுடன் செய்வார்கள்! காய்கறிகள் எல்லாமே

பேதமின்றி ஒற்றுமையாய் உள்ளது  போலத்தான்

பேதமற்ற நாடே சிறப்பு.



*🤗புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்,*


இயற்கைப் பழங்களில் ஆற்றல் அதிகம்!

பழக்கலவை நாமும் பருகினால் ஆற்றல்தான்!

பழக்கலவை ஆற்றல் பெறு.


*🤗ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்,*


பனிக்குழைவில் உள்ள குளிர்ச்சியைப் போல

மனதைக் குளிர்ச்சியாக வைப்பதே நன்று!

மனம்கொதித்தால் என்றுமே கேடு.


*🤗டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்......,*

🤣🤣🤣


மனத்திற்கண் மாசின்றி வாழும் நிலையே

மணக்கும் டிகிரிகாபி சொல்லும் நிலையாம்!

கலப்பட எண்ணம் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home