ஊர்களும் பொருள்களும்
ஊர்களும் புகழ்பெற்ற பொருள்களும்!
பண்ணுருட்டி ஊரில் பலாப்பழம் தஞ்சாவூர்
கண்கவரும் பூவாய்க் கதம்பத்தைக் கட்டிவைப்பார்!
செந்தமிழ் மாமதுரை மல்லிகைப் பூமணக்கும்!
அம்மா சுருள்முறுக்கு காரியா பட்டியிலே
தென்னக நெல்லைக்கோ அல்வா இனிமைதான்!
அன்பான சாத்தூர்க்கோ காராச்சே வென்பார்கள்!
விண்முட்டும் கோவிலுள்ள கோவில்பட் டிக்கடலை மிட்டாய் புகழ்மணக்கும்!
ஆண்டாளின் வில்லிப்புத் தூரிலே பால்கோவா
பாங்காக செய்திடுவார்! திண்டுக்கல் பூட்டென்பார்!
இன்றோ பிரியாணி என்றே தலப்பாகட்(டி)
என்றே பெயர்சொல்லும்! குன்று பழனிபெயர்
பஞ்சாமிர் தம்மென்றால் நாவோ நடமாடும்!
கண்ரசிக்கும் கோடை மலையென்றால் ஆரஞ்சுதான்!
செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ஆகாகா!
எங்கும் வெடிக்க சிவகாசி பட்டாசு!
அங்கே பரோட்டா விருதுநகர் பேர்சொல்லும்!
பெங்களூரு சென்றுவரும் பாதையில் ஆம்பூரில்
நாமணக்க நல்ல பிரியாணி உண்டங்கே!
பாமணக்கும் நம்ம திருப்பூரில் ஆடையுண்டு!
சேலமோ மாம்பழத்தின் நற்சுவையை ஏந்திவரும்!
ஊத்துக் குளிவெண்ணெய் மக்கள் ரசித்திருப்பார்!
போற்றும் மணப்பாறை ஊரில் முறுக்குண்டு!
காத்தாட தூங்கிடப் பத்தமடைப் பாயென்பார்!
காஞ்சித் திருநகரம் பட்டென்றால் பட்டுதான்!
ஆகா! அனுப்பர்பா ளையத்தில் பாத்திரங்கள்!
வாகாக எங்கள் தமிழ்நாட்டில் ஊர்தோறும்
ஏக பொருளுண்டு தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home