நெஞ்சகமே நூலகம்
https://heyzine.com/flip-book/be59bb137e.html
செ.வ.இராமாநுசன் வழங்கும்
*நெஞ்சகமே - நூலகம்! நூலகமே - நெஞ்சகம்!*
*ஞாயிறுதோறும் நன்னூல் அறிமுகம்!*
உவப்பத் தலைக்கூடி உள்ளம் மகிழ்வோம்!
*நாள்: 02-03-2025. நூல் - 06*
நூலின் தலைப்பு:
*குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்*
ஆசிரியர்: *மதுரை பாபா ராஜ்*
*வெளியீடு:*
வசந்தா பதிப்பகம், சி-1, பிரார்த்தனா குரோவ் அடுக்ககம், செங்கமலம் வளாகம், நகர் இணைப்பு சாலை, ஆதம்பாக்கம், சென்னை - 600088.
பேசி: 9003260981.
*வெளியிடப் பெற்ற முதல் ஆண்டு:* 2024
*நூலாசிரியரைப் பற்றி:*
பயிரியல் துறையில் அறிவியல் இளையர் பட்டம் வென்று, மதுரை மற்றும் சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, முதுநிலை அலுவலராக நிறைவு செய்தவர் தாம் நூலாசிரியர் மதுரை பாபா ராஜ் அவர்கள்.
எப்பொருளைப் பற்றியும், மணித்துளியில் மரபு பா வடிக்கும் ஆற்றல் படைத்தவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்வதில் வல்லவர். தமிழ் இலக்கியங்களில் தனியாதக் காதல் கொண்டவர். குறிப்பாகத் திருக்குறளை பல்வேறு கோணங்களில் எளிமைப்படுத்தி, நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தவர். அதில் இவரது கோணங்கள் தனித்துவம் மிக்கன.
25 நூல்களுக்கும் மேலாக எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் பல மின்னூல்களாக, இணையத்தில் உலா வருகின்றன. தொலைக்காட்சியில் தோன்றி, குறள் உரையை ஆற்றி மகிழ்வித்தவர்.
*நூலின் கரு:*
குறள் வெண்பாவினைப் பற்றி யாவரும் அறிவர். அத்தகைய குறள் வெண்பாவிலேயே திருக்குறளின் முப்பாலுக்கும் எளிமையாக விளக்கம் தருவது நூலின் கருவாகும்.
அங்ஙனம் பார்க்கின்ற பொழுது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், திருவள்ளுவர் எடுத்து ஆண்ட பொருளைப் பற்றியே, இன்று மதுரை பாபா ராஜ் அவர்களும் குறள் இயற்றி விளக்கம் அளித்துள்ளார். ஆக ஒரு வீடு - இரு வாசல் என்றே சொல்லலாம்.
*பொருளடக்கம்:*
அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுக்கும் குறளுரை ஆற்றி வழங்கியுள்ளார். வள்ளுவர் எழுதிய குறள்தனை மேலே எழுதி, அடுத்த நிலையில் ஆசிரியர் பாபா ராஜ் அவர்களின் குறளுரை வருகின்றது.
*கட்டமைப்பு:*
மஞ்சள் வண்ண அட்டையில் அய்யன் திருவள்ளுவர் படத்துடன், நல்ல கட்டு போட்டு அழகுற நமது கைகளில் தவழ விடப்பட்டுள்ளது, குறள்களுக்கு குறள் வடிவில் விளக்க நூல்.
நூலாசிரியரின் அறிமுகத்துளிகள், அவர் எழுதி வெளியிட்ட நூல்களின் பட்டியல் மற்றும் அறிஞர்களின் வாழ்த்து மடல்கள் என எழில் பொங்க நூலின் பக்கங்கள் விரிகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு குறள் மூலமும் நான்கு விளக்கக் குறள்களும் அமைக்கப்பட்டுள்ளன.
1330 குறள்களுக்கும் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளன. 300 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூபாய் 300 என்றாலும், சிறப்பு விலையாக ரூபாய் 200 என்றே வழங்கப்படுகிறது. இந்தத் தென்றல் விலை என்பது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.
*நமது கருத்து:*
வழக்கமான திருக்குறள் உரைகள் என்பன, தத்தமது விளக்கங்களை - இயல் நடையில் காட்டும் நூல்களாகத் தான் அமைந்திருக்கும். ஆனால் மாறுபட்டக் கோணங்களில், தனது பார்வையைச் செலுத்தி மகிழும் நூலாசிரியர் பாபா ராஜ் அவர்கள், குறள்களுக்கு குறள் வெண்பாவிலேயே விளக்கம் அளித்துள்ளமை பெருஞ்சிறப்பு ஆகும்.
எளிய நிலை சொற்களால், குறள் வெண்பா மாலையைத் தமிழ்த்தாய்க்கு அணிவித்து, இலக்கிய உலகில் ஏறு நடை போடுகிறார், வீறுகொண்ட பாபா ராஜ் அவர்கள்.
எடுத்துக்காட்டாக முதல் திருக்குறளுக்கு இப்படி விளக்கம் தருகின்றார்.
'அகரம் மொழிக்கு முதலாம் இறையோ உலகின் முதலென் றறி'
குறள் 288 தனை விளக்குகின்ற பொழுது,
'களவுமனம் வஞ்சகத்தை நாடும்; நேர்மை
உளமோ அறவழிக்கு தூது'
என்கிறார்.
குறள் 742இல்
'நீரும் நிலமும் மலையும் நிழற்காடும்
சேர்ந்ததே நாட்டுக்கு அரண்'
என்கிறார்.
இப்படி 1330 குறட்பாக்களுக்கும் பாவலர் - மணிக்குறள் பாபா ராஜ் அவர்கள், புதிய குறள் உரையை வழங்கி விட்டார்.
நாம் அந்த குறட்பாக்களை துய்த்து மகிழ்வதற்கும், வாழ்ந்து நிறைவதற்கும் முன் வந்தால், உறுதியாக முழுமையைப் பெறுவோம்! புதியதொரு உலகைப் படைப்போம்! வெற்றி நமதே!
வாழ்க தமிழ்!
வளர்க குறள் மணம்!
*நூல்களைப் படிப்போம்! அறிவொளி பெறுவோம்! நூல்களைப் படைப்போம்!*
*# வாருங்கள், அடுத்த வாரம்! புதிய நூலுடன் சந்திப்போம்! சிந்திப்போம்! செயல்படுவோம்!*
0 Comments:
Post a Comment
<< Home