கேள்வி -- 42
--------------------------------------------------------
கேள்வி -- 42
---------------------------------------------------------------
கல்விகேள்வி கேட்டுச் செவிபெறும் செல்வந்தான்
செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வமாம்!
கேட்கும் விருந்து செவிக்கில்லா நேரத்தில்
தாக்கும் பசிதணிய கொஞ்சம் உணவிங்கே
வயிற்றுக் கிங்கே தந்தே மகிழ்ந்திடலாம்!
கேள்வி உணவை உடையோர் மண்ணகத்தில்
வாழ்ந்தாலும் நெஞ்சே! அவியுணவு உண்கின்ற
விண்ணகத் தேவருக் கிணையாவார் பண்பகமாய்!
கற்கவில்லை என்றாலும் கற்றறிந்த அறிஞரிடம்
கேட்டறிந்து வாழவேண்டும்! கேட்டறிதல் ஊன்றுகோலாய்
துன்பமான நேரத்தில் துணைபுரியும் வாழ்வினிலே!
ஒழுக்கமுடன் வாழ்பவரின் சொற்களோ நம்மைத்தான்
வழுக்கும் தரையில் விழாமல் காப்பாற்றும்!
ஊன்றுகோல் போல சமயத்தில் துணைபுரியும்!
அளவில் சிறிதெனினும் நற்சொற்கள் கேட்பதனால்
வாழ்க்கை வளமாகும்! நிறைவுக்கே வழிகாட்டும்!
கேள்விஞானம் கொண்டவர்கள் தவறாகப் பொருளுணர்ந்தால்
நிதானத்தை விட்டுத்தான் இழிந்தசொல் கூறமாட்டார்!
சான்றோரின் நல்லுரையைக் கேட்க மறுப்பதுவோ
ஊன்செவி கேளாக் காதுகள்போல் வீணாகும்!
கேள்வி அறிவுடையோர் இன்றி மற்றவர்கள்
வாயிருந்து பணிவான சொற்களோ உதிராது!
செவிச்சுவை உணராமல் வாய்ச்சுவை அறிந்தவர்கள்
வாழ்ந்தாலும் இறந்தாலும் வேறுபாடே கிடையாது.
0 Comments:
Post a Comment
<< Home