Friday, August 29, 2008

வாழப்பிடிக்கவில்லை!

வந்துவிட்டேன் வழ்வதற்கு! வாழப் பிடிக்கவில்லை!
நொந்து தவிக்கின்றேன் நாள்தோறும்--வெந்து
கருகி மறைந்திருந்தால் நிம்மதி யுண்டு!
உருகி மருகுகின்றேன் நான்.

சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடுதடா!
நாகம்போல் சீறித்தான் கொத்துதடா--தேகமெல்லாம்
காயங்கள் உள்காயம் உள்ளத்தில் தேங்குதடா!
மாயந்தான் வாழ்வா? இயம்பு.

தவறுக்கு யாரிங்கே காரணமோ? அம்மா!
அவரா? இவரா? சினத்தை--அவதாரம்
கொள்ளவைத்தே ஆர்ப்பாட்டம் செய்கின்றார்! வேடிக்கை!
துள்ளுவதில் போட்டியா? தூ.

சொற்களாளே சுட்டவடு ஆறாதே என்றவர்தான்
குற்றத்தைச் செய்தவர்க்கும் நன்மையை--அற்புதமாய்ச்
செய்யவேண்டும் என்றேதான் சொல்கின்றார் பாருங்கள்!
உய்வதற்கே நல்லிணக்கம் நாடு.

நாள்தோறும் உள்ளத்தில் என்னென்ன கோலங்கள்!
வேல்முனையில் தாக்கினாலும் இத்தகைய--கால்பதிக்கும்
காயங்கள் ஏற்படுமா? தாங்க முடியவில்லை!
வாழப் பிடிக்கவில்லை ! இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home