Monday, December 22, 2008

ஆசை

தந்தையைத் தாயை மீண்டும்
தரணியில் காண ஆசை!
எந்தமிழ்க் கவிதை தன்னை
இருவரும் கேட்க ஆசை!
அன்புடன் பணிந்து நின்றே
அவரருள் நாட ஆசை!
இன்றுநான் வாழும் வாழ்வை
இருவரும் கணிக்க ஆசை!


என்மகள் மகனும் இங்கே
இசைவுடன் கல்லூ ரிக்கு
இன்பமைச் செல்வ தைத்தான்
இருவரும் பார்க்க ஆசை!
தன்னிலை மறந்தே அந்த
தவத்திரு அடித்த ளங்கள்
மனமுவந் தேதான் வாழ்த்தும்
மாட்சியை ரசிக்க ஆசை!

துன்பமோ நெருங்கும் போது
துணையென அவர்கள் நின்று
மனத்தினில் துணிவை ஏந்தும்
வழிமுறை சொல்ல ஆசை!
இன்பமோ துள்ளும் போது
இருவரும் அருகில் வந்து
அனைத்தையும் ஒன்றாய் எண்ணும்
அறிவுரை வழங்க ஆசை!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home