Monday, December 22, 2008

இன்னொரு காந்தி வேண்டும்

இன்னொரு காந்தி வேண்டும்
என்றொரு தாகம் நெஞ்சில்
பன்முறை எழுந்த போதும்
பகற்கன வென்றே தோன்றும்!
என்னடா இந்த தேசம்
எதற்கெடுத் தாலும் லஞ்சம்
என்பதை விதியாய் மாற்றி
இயல்பென ஆக்கி விட்டார்!

வன்முறை வறுமை பொய்மை
வஞ்சகம் பேதம் கொள்ளை
மன்பதை வீதி தன்னில்
மக்களைச் சுவைத்துப் பார்க்கும்!
இந்தியத் தாயின் வீட்டை
எப்படி யேனும் தாக்கிச்
செந்தணல் படரச் செய்யும்
சிந்தனை தேவை தானா?

அன்புடன் மனித நேயம்
அறநெறி ஒழுக்கப் பண்பு
நன்னெறி போற்றும் எண்ணம்
நடைமுறை யாதல் வேண்டும்!
தன்னலம் பொசுங்கிப் போகத்
தாய்த்திரு நாடு வாழ
இன்னொரு காந்தி வேண்டும்!
என்றிது செயலாய் மாறும்?

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home