இயேசுவின் பொன்மொழிகள்
இயேசுவின் பொன்மொழிகள்
(கவிதை முயற்சி கருத்துக்களை வரவேற்கின்றேன்)
=====================================
மத்தேயு:5:44
====================================
உந்தன் எதிரிகளை நண்பர்க ளாக்கிவிடு
உன்னைச் சபிப்போரை ஆசிதந்து வாழ்த்திடு!
உன்னைப் பகைப்பவருக்கு நன்மைகள் செய்திடு!
நிந்தித்துத் துன்பப் படுத்தினால் அன்னாரின்
நன்மைக்கு நாளும் கடவுளை நோக்கியே
அன்புடன் வேண்டிக்கொள்! என்றேதான் ஏசுநாதர்
புண்படுத்தும் மாந்தரைப் பண்படுத்தும் பக்குவத்தை
நன்னெறியைக் காட்டுகின்றார் பார்.
=====================================
மத்தேயு:6:19/20
====================================
மண்ணகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கவேண்டாம்! ஏனென்றால்
இங்குள்ள பூச்சிகள் தாக்கும்! துருப்பிடிக்கும்!
கன்னமிட்டே தேடித் திருடுவார் கள்வர்கள்!
துன்புறுத்தும் உன்னைத்தான் பார்.
விண்ணகத்தில் சேர்த்துவைத்தால் அஞ்சிட வேண்டாமே!
அங்கெல்லாம் பூச்சிகளும் இல்லை! துருப்பிடிக்கும்
பங்கமும் இல்லை! திருட்டுப் பயமுமில்லை!
பொன்மனம் இன்புறும் பார்.
=====================================
மத்தேயு:6:22/23
====================================
கண்கள் உடலின் விளக்குகளாய் உள்ளன!
என்றும் தெளிவாய் இருந்தால் வெளிச்சந்தான் !
கண்களோ கெட்டிருந்தால் மேனி இருள்மயந்தான்!
உன்னுள் இருக்கும் வெளிச்சம் இருளானால்
அந்தஇருளை எண்ணிப்பார்! எவ்வளவு விஞ்சிவிடும்!
பண்பிழக்கும் வாழ்வே இருள்.
=====================================
மத்தேயு:6:26--33
====================================
பறவைகளோ இங்கே விதைப்பது மில்லை!
அறுப்பது மில்லை! களஞ்சியத்தில் நாளும்
நிறைவுடன் சேர்ப்பது மில்லை! பிதாதான்
நிதமுமே காக்கின்றார் பார்!
உடைக்காக நீங்களேன் வாடவேண்டும்? காட்டில்
நிறங்களை ஏந்தி மலர்கின்ற பூக்கள்
பதமாய் உழைக்கிறதா? நூற்கிறதா? இல்லை!
நிதமும் உடுத்ததில்லை பார்.
அடுப்பில் இடப்படும் புல்லுக்கு தேவன்
உடுத்தினால் உங்களுக்கும் நாளும் உடுத்தும்
உறுதிகள் உண்டல்லவா?தேவனை நம்பி
எடுத்துவைப்போம் நம்அடியை இங்கு.
எதையுண்போம்? இங்கே எதைக்குடிப்போம்? மேலும்
எதையுடுப்போம்? என்றேதான் அஞ்ஞானி தேடி
பதறுவான்! உங்களுக்கு என்னதேவை? தேவன்
நிதமறிவான் என்றேதான் நம்பு.
தேவன் அரசையும் நீதியையும் தேடுங்கள்!
ஆவன செய்வான் அனைத்தும் கிடைப்பதற்கு!
நேயமுடன் தந்து மனங்களை வாழ்த்துவான்!
வாழவழி காட்டுவான் பார்.
======================================
மத்தேயு: 7:3,4,5.
========================================
உன்கண்ணில் உள்ளாடும் உத்திரத்தைப் பார்க்காமல்
உன்னருகே உள்ளவனின் கண்களில் தென்படும்
சின்னத் துரும்பை நினைத்துக் கொதிப்பதென்ன?
உன்னை முதலில் திருத்து.
================================================
மத்தேயு: 7:7.
================================================
கேளுங்கள்! தேவை யறிந்துதான் கொடுத்திடுவோம்!
நாள்தோறும் தேடுங்கள்! அப்பொழுது கண்டடைவீர்!
தூய்மையுடன் தட்டுங்கள்! உள்ளம் திறந்துவிடும்!
ஆர்வ உழைப்பே தளம்.
=======================================================
மத்தேயு:12:33
=========================================================
நல்லமரம் என்றால் அவற்றின் கனிகளும்
நல்லதென்று சொல்லுங்கள்! கெட்டமரம் என்றாலோ
அவற்றின் கனிகளும் கெட்டதென்றே சொல்லுங்கள்!
மரத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அந்த
மரத்தின் கனிச்சுவைப் பண்பே தளமாம்!
தரமோ கனிகள்தான் சாற்று.
=========================================================
மத்தேயு:12:35
=========================================================
நல்லவனா? கெட்டவனா? பேசுகின்ற சொற்களில்
துள்ளிவரும் நற்பண்பும் தீப்பண்பும் காட்டிவிடும்!
உள்ளத்தின் பொக்கிஷம் சொற்களாய் ஓடிவரும்!
சொல்லே உரைகல் உணர்.
===================================================
மத்தேயு:14:47--50
======================
பரலோக ராஜ்யம் கயல்களுக் காக
அலைகடலில் வீசும் வலைபோ லாகும்!
கரையில் இழுத்து தரமான மீனை,
தரமற்ற மீனைப் பிரித்தே குவிப்பார்!
உலகின் முடிவிலும் தேவதூதர் வந்து
விலக்குவார்! பொல்லா மனிதரைப் பிரித்தே
கலக்குவார் சூளையில் !நல்லவரை என்றும்
வரவேற்பார் தேவன் மகிழ்ந்து.
================================================
0 Comments:
Post a Comment
<< Home