இரண்டு மனங்கள்!
=======================================
தெருவில் நடந்தேன்!மயங்கி விழுந்தேன்!
திரண்டது கூட்டம்! பரபரப்பில் அங்கே
தருவித்தார் தண்ணீரை! என்மேல் தெளித்தார்!
ஒருவாறு நானும் மயக்கம் தெளிந்தேன்!
விரலிலே போட்டிருந்த மோதிரத்தைக் காணோம்!
கருணை மனத்தால் பிழைத்தேன்! எழுந்தேன்!
திருட்டு மனத்தால் பதைத்தேன்! இழந்தேன்!
இருவரும் வாழ்கின்றார் இங்கு.
==================================================
தெரிந்தே செய்யும் தப்பு!
=========================
வாழைப் பழத்தோல் வழுக்கும் எனத்தெரிந்தும்
சாலை நடுவில் எறிந்துவிட்டுச் செல்கின்ற
நேயமற்ற மாந்தரை என்சொல்ல? தான்விழுந்து
காயமுற்றால் தானுணர்வா ரோ?
=================================================
நேர்மை தவறாதே!
======================
நேற்றுவரை செல்வந்தர்! இன்றோ நடுத்தெருவில்!
காற்றால் ஒதுக்கிய குப்பையாய் மாறிவிட்டார்!
ஏற்றம் இறக்கம் உலகில் இயல்புதான்!
ஏற்றத்தில் நேர்மையுடன் வாழ்.
=====================================================
உறவு--பிரிவு
==============
உனக்கும் எனக்கும்
ஒருவிரல் இடைவெளிதான்!
ஒட்டாவிட்டால் உறவு!
ஒட்டிவிட்டால் பிரிவு!
======================================================
0 Comments:
Post a Comment
<< Home