Saturday, February 09, 2019


குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

இந்தக் குறளின் கருத்தைநீ
அம்மா எனக்குச் சொல்வாயா?

அறத்தைச் செய்ய அன்புவேண்டும்
மறத்தைச் செய்யவும் அன்பென்னும்

அளவு கோல்தான் புரியவில்லை
அம்மா கொஞ்சம்  சொல்லித்தா!

கருணை இரக்கம் இதயத்தின்
கருப்பொரு ளாக  மாறிவிட்டால்

அன்பு சுரந்து ஊற்றாகும்!
அறத்தைச் செய்ய துணையாகும்!

நாட்டின் மீது அன்புகொண்டே
நாட்டை வீரர் காக்கின்றார்!

பகைவர் நாடைத் தாக்கவந்தால்
வீரத் தோடு போர்புரிவார்!

அன்பின் வலிமை வீரந்தான்!
அறத்தின் அன்பு ஈரந்தான்!

அறமும் மறமும் தழைப்பதற்கு
அடிப்படை இங்கே அன்பாகும்!

நாட்டைக் காப்பதும் அன்பாகும்!
வீட்டைக் காப்பதும் அன்பாகும்!

இல்லறந் தன்னில் அன்பிருந்தால்
நல்லறந் தன்னைக் கடைப்பிடிப்போம்!

விவேகம் கலந்த வீரத்தால்
நாட்டைக் காப்பது அன்பாகும்!

0 Comments:

Post a Comment

<< Home