Sunday, September 29, 2019

நடந்தால் நல்லது!

அமைச்சர்கள் எல்லோரும் கோட்டையில் இல்லை!
இமைப்பொழுதும் சோராமல் மக்களிடம் சென்று
தினையளவுக் குற்றம் குறையெனினும் கேட்டு
வினையாற்றும் கோலத்தைப் பார்.

துறையெல்லாம் ஊழலின்றி வேலைகள்
நாளும்
கறைபடியா கைகளுடன் ஓடோடிச் சென்று
குறித்தநேரம் மக்களைப் பார்த்தே அன்பாய்
நிறைவேற்றும் ஆர்வத்தைப் பார்.

திறப்பு விழாக்களா? ஆட்சியரை வைத்தே
சிறப்பாக அங்கே நடத்துகின்ற கோலம்!
எளிமை சுருக்கம் நிகழ்வின் நடப்பு!
குழப்பமே இல்லா நிலை.

அமைச்சர் வருகைக்கு மாணவர்கள் மக்கள்
குமுறியே காத்திருக்க வேண்டாம்! விழாக்கள்
அமைச்சரின்றி அந்தப் பகுதியில் வாழ்வோர்
துணைக்கரம் நீட்ட நிகழ்வு.

தேர்தலா? வேட்பாளர் மற்றும் நால்வருடன்
தேர்தல் பரப்புரை செய்வார்! படைதிரட்டி
பாரிலே மன்னர்போல் கூட்டமாக  செல்லமாட்டார்!
நேர்மையும் வாய்மையும் மூச்சு.

குடிமைப் பொருட்கள் வீடுதேடி வந்தே
குடிமக்கள் இல்லறத்தைச் செம்மையாய் வாழ
நெறிபிறழா ஆட்சி கடமை உணர்வில்
வறுமைப்
பிடியவிழ்க்கும் திட்டத்தைப் போற்று.

மதுக்கடைகள் எல்லாம் மூடிவிட மக்கள்
மதுவை மறந்து குடும்பக் கடமையிலே மூழ்கி
தடுமாற்றம் இல்லாமல் வீட்டில்  மகிழ்ச்சி
படர்ந்திருக்க வாழ்கின்றார் காண்.

லஞ்சமில்லை ஊழலில்லை எந்தத் துறையிலும்
வஞ்சம் அரசியல் சாயமே இல்லாமல்
செங்கோல் வளையாத ஆட்சி  நடக்கிறது!
கண்விழித்துப் பார்த்தேன்! கனவு!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home