Friday, November 22, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்!
---------------------------------------------------
மெய்யுணர்தல்--36 
--------------------------------------------------------------
நிழலை உண்மையென்று நம்பாதே
--------------------------------------------------------------------
பொய்யை மெய்யாய் நினைக்கின்ற
மயக்கம் விதைப்பது துன்பந்தான்!

மயக்கம் தெளிந்து உணர்ந்துவிட்டால்
துன்பம் விலகி இன்புறுவார்!

உண்மைப் பொருளை அறிந்தவர்க்கு
விண்ணகம் அருகில் இருக்கிறது!

புலன்களை அடக்கி வாழ்ந்தாலும்
மெய்யுணர் வற்றோர் வீணர்தான்!

பொருளின் தன்மை எதுவெனினும்
உண்மை அறிதல் அறிவுடைமை!

மெய்ய்ப்பொருள் உணரக் கற்றவர்கள்
பிறவா நிலைக்கே செயல்படுவார்!

மெய்ப்பொருள் தன்னை உணர்ந்தவர்க்கு
மீண்டும் பிறவி இருக்காது!

பிறவித் துன்பம் அடைவதற்குக்
காரணம் இங்கே அறியாமை!

அதனை நீக்கும் செம்பொருளை
உணர்ந்து தெரிவது மெய்ப்பொருளாம்!

உணர்ந்து திளைக்கும் சான்றோரை
துன்பம் என்றும் துளைக்காது!

ஆசை கோபம் அறியாமை
நீக்கி வாழ்ந்தால் இன்னல்கள்
என்றும் நம்மைத் தீண்டாது!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home