Sunday, November 17, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
வாய்மை-- 30 
------------------------------------------------
உண்மை பேசினால் நிம்மதி
---------------------------------------------
எள்முனை யளவும் பொய்யற்ற
சொல்லைப் பேசுதல் வாய்மையாம்!

நற்பயன் இங்கே கிடைக்குமென்றால்
பொய்மையும் வாய்மை யாகிவிடும்!

மனதை மீறிப் பொய்சொன்னால்
மனமே சுட்டுப் பொசுக்கிவிடும்!

பொய்யை எண்ணா மனங்கொண்டோர்
நல்லோர் மனதில் வாழ்ந்திருப்பார்!

சொல்லும் செயலும் உண்மையானால்
தானம் தவத்தினும் மேலாகும்!

பொய்சொல் லாததே அறமாகும்!
வேறொரு அறச்செயல் தேவையில்லை!

குளித்தால் கிடைக்கும் புறத்தூய்மை!
வாய்மை தருமே அகத்தூய்மை!

ஒளிதரும் விளக்குகள் விளக்கல்ல!
வாய்மைப் பண்பே ஒளிவிளக்காம்!

அறிந்து உணர்ந்த நூலெல்லாம்
அறமெனச் சொல்வது வாய்மையைத்தான்!

பொய்மை என்றும் தோற்றுவிடும்!
வாய்மை ஒன்றே வென்றுவிடும்!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home