Tuesday, December 17, 2019

 வள்ளுவத்தின் முடிவற்ற வாதங்கள்!

வள்ளுவம் பள்ளியில் மாணவராய் வந்துசேர்ந்தேன்!
வள்ளுவர் கூறிய பண்புக் கருத்துகளில்
எல்லோரும்  ஒற்றுமையாய்க் கூறுவார்கள் என்றெண்ணி
வள்ளுவத்தை ஆய்ந்த அறிஞர்கள் வாதங்கள்
ஒவ்வொன்றாய்த் தந்தபோது பார்த்தேன் முரண்களை!
நைந்தேன் முரண்களைக் கண்டு.

ஒருவரோ  ஒன்றை உரைத்தால் உடனே
இருவர் மறுப்பார் உடன்பட மாட்டார்!
வரிந்துகட்டி மற்றொருவர் வந்து முரைப்பார்!
எரிமலை போலக் குமுறி வருவார்!
விழிபிதுங்க வேடிக்கை பார்ப்பேன் இருந்து!
தெளிவு கலங்கும் திகைத்து.

வேதக் கருத்தா?  பகுத்தறிவு கூறுவதா? வேகமாய்ச் சொல்லும் மதக்கருத்தா? எக்கருத்து
நாதக் கருத்தாகும் வள்ளுவத்தில்  என்றுகேட்டால்
வாதங்கள் ஊடக வாதம்போல் எம்முடிவும்
கூற இயலாதே இங்கு.

சாதிமதச் சார்பற்ற நற்கருத்தை வள்ளுவத்தின்
நீதிநெறிச் சாரமாக மக்களெல்லாம் வாழ்வதற்கு
ஈடில்லா நூலாக என்றும் பொதுமுறையாய்
மேதினியில் ஏற்போம்நாம் வாதமின்றி என்றுரைப்பேன்!
வாதமற்ற நல்விளக்கம் தா.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home