Sunday, October 04, 2020

பாலாவின் சங்கச்சுரங்கம்

 பாலாவின் சங்கச் சுரங்கம்!


இணையப்பத்து-- இரண்டாம்பத்து!


எட்டாம் உரை!


03.10.20


தலைப்பு: தமிழ்கெழு கூடல்


வரவேற்புரை


சுந்தர் வரவேற்றார் பாலா அணுகுமுறை

தந்த தலைப்பை விளக்கி விளக்குகின்ற 

பன்முக ஆற்றலை வாழ்த்தியே பேசினார்!

இன்முக சுந்தருக்கு வாழ்த்து.


பாலா!


சிந்துவெளி நாகரிகம் தொட்டுத் தொடங்கியே

இன்றுள்ள கீழடி ஆய்வு தொடர்ந்தேதான்

கண்டு பிடிப்பின் தரவுகளைச் சான்றுகளைக்

கண்முன் விளக்கினார் காண்.


ஆறுகள் அள்ளித் தெளிக்கும் வரலாறை

ஆர்வமுடன் தந்தார் சுணக்கமின்றி! வைகையின்

காட்சியைக் கண்முன் பரிபாடல் தந்ததைக்

கேட்டு மகிழ்ந்திருந்தோம் நேற்று.


தமிழ்கெழு கூடல் தமிழ்மணக்கும் கூடல்

தனிமணம் வீசும் மதுரையில் சங்கம்

கனிந்த வரலாற்றைச் சொன்னார் உவந்தே!

இனிமை மணங்கமழும் பேச்சு.


மதுரை நகரின் அமைப்பை விளக்கி

நடுவிலே கோயில்! அதைச்சுற்றி வீதி

அடுக்கடுக்காய் காட்டும் படத்தால் விளக்கி

மதுரைப் பெருமையைச் சொன்னார் மகிழ்ந்து!

மதுரையார் பாலாவை வாழ்த்து.


வைகை நதியிலே காதலர் ஆட்டத்தை

மெய்மறந்து பாடி பரிபாடல் சித்திரம்

உள்ளங் கவர விளக்குவதைப் பேசினார்!

கள்ளங் கபடற்ற வாழ்வு.


சந்தனமும் நெய்யும் மலர்களும் வைகையில்

தண்ணீரில் சேர்ந்து மிதந்திருக்க அந்தணர்கள்

அங்கே இறங்க முகஞ்சுழித்து நிற்பதை

கண்ணெதிரே காட்டினார் சாற்று.


சிலம்பாறு  என்றே இருந்ததே இங்கே

அழகரின் கோயிலின்  நூபுர கங்கை!

கிருதுமால் என்ற நதியும் கனிகள்

குலுங்கும் பழமுதிர் சோலை இடமும்

விளக்கிய ஆற்றலோ நன்று.


பாண்டியனும் சோழனும் சேர்ந்திருந்த காட்சியைப்

பார்த்த புலவர் மகிழ்ந்தேதான் ஒற்றுமையாய்

வாழ்ந்தால் அமைதியாக்மக்களும் வாழ்வார்கள்

நாடுகளும் பேரமைதி கொண்டே செழிக்குமென்றார்!

நாடுபோற்ற வாழ்கவென்றார் நின்று.


இலக்கணக் கொத்து/ கூத்து


தமிழிலே ஐந்துசொற்கள் மட்டுமே உண்டு!

தமிழின் தரத்தை வளத்தைக் குறைத்த

இலக்கணக் கொத்தோர் கொத்தல்ல கூத்தே!

எதிர்ப்பைப் பதிவுசெய்தார் நன்கு.



பாலாவின் பேச்சில் புதுமைத் தலைப்புகள்

கோலோச்ச சங்க இலக்கியக் காட்சிகள்

வாரங்கள் தோறும் உரைகளைக்  கேட்பதற்கு

ஆர்வமுடன் காத்திருப்போம் இங்கு.


கவிஞர் நந்தலாலா!


பாலாவின் பேச்சில் விளைந்த முத்துகளை

நேர்த்தியாய்ப் பேச்சில் தொடுத்தேதான் நந்தலாலா

காய்தல் உவத்தலின்றி சூட்டி மகிழ்ந்திருந்தார்!

நேயமுடன் பாவலரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

04.10.20


0 Comments:

Post a Comment

<< Home