14. ஒழுக்கம் உடைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
14. ஒழுக்கம் உடைமை
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படுமென்றார் அய்யன்.
ஒழுக்கமே வாழ்வில் உயர்வை வழங்கும்!
ஒழுக்கம் உயிரினும் மேல்.
குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணையென்றார் அய்யன்!
ஒழுக்கமே வாழ்வின் துணையாம்! அதனைப்
பழுதின்றிக் காத்தால் உயர்வு.
குறள் 133:
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடுமுன்னால் அய்யன்!
ஒழுக்கம் உயர்ந்த பிறப்பை உணர்த்தும்!
இழிவே ஒழுக்கமற்ற பண்பு.
குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடுமென்றார் அய்யன்!
மறையை மறந்துவிட்டால் கற்கலாம் மீண்டும்!
ஒழுக்கம் குறைந்தால் இழிவு.
குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வென்றார் அய்யன்!
பொறாமைக் குணமிருந்தால் செல்வமில்லை! ஒழுக்கப்
பிறழ்விருந்தால் இல்லை உயர்வு.
குறள் 136:
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்தென்றார் அய்யன்!
ஒழுக்கம் பிறழ்ந்தால் இழிவென் றறிந்தோர்
ஒழுக்கம் தவறமாட்டார் சொல்.
குறள் 137:
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழியென்றர் அய்யன்!
ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்! பிறழ்ந்தால்
பழியும் தலைகுனிவும் தான்.
குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தருமென்றார் வள்ளுவர்!
நல்லொழுக்கம் நன்மை தருவது! தீயொழுக்கம்
அல்லலுக்கு வித்தூன்றும் சொல்.
குறள் 139:
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொல்லென்றார் அய்யன்!
தவறியும் தீயசொல் சொல்லார் ஒழுக்க
நெறிகொண்டு வாழ்வோர் தான்.
குறள் 140:
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தாரென்றார் அய்யன்!
உயர்ந்தோர் ஒழுக்கத்தை ஏற்க மறுப்போர்
பலகற்றும் கல்லார் உணர்.
0 Comments:
Post a Comment
<< Home