Tuesday, December 08, 2020

16. பொறையுடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!


16 பொறையுடைமை

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலையென்றார் அய்யன்!

அகழ்ந்தெடுத்தும்  நம்மையே தாங்கும் நிலம்போல்

இகழ்வாரை நாம்பொறுத்தல் பண்பு.

குறள் 152:

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை

மறத்த லதனினும் நன்றஎன்றார் அய்யன்!

பொறுப்பதைக் காட்டிலும் தீங்கிழைத்தால், தீங்கை

மறப்பதே பண்பட்டோர்

சால்பு.

குறள் 153:

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறையென்றார் வள்ளுவர்!

வன்கொடுமை ஏழ்மை! வலிமையோ 

பண்பற்றோர்

செய்யும் செயல்பொறுத்த லாம்.

குறள் 154:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படுமென்றார் அய்யன்!

பொறுமையின் சின்னமாக உள்ளவரை 

மாந்தர்

நிறைகுடம் என்பார் புகழ்ந்து.

குறள் 155:

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்தென்றார் அய்யன்!

பொறுமை இழந்தோரைத் தூற்றுவார்!

என்றும் 

பொறுத்தாரைப் பொன்னென்பார் இங்கு.

குறள் 156:

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழென்றார் அய்யன்!

தவறுசெய்தால் தண்டித்தால் கடுகளவே இன்பம்!

பொறுத்தாலோ வாழ்நாள் புகழ்.

குறள் 157:

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்

தறனல்ல செய்யாமை நன்றென்றார் அய்யன்!

பழிக்குப் பழியென்று வாழ்தல் மடமை!

பழிமறந்து வாழ்வதே பண்பு.

குறள் 158:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்

தகுதியான் வென்று விடலஎன்றார் அய்யன்!

செருக்குடன் தீங்கிழைக்கும் தீயோரை என்றும்

பொறுமையுடன் வெல்தல் எளிது.

குறள் 159:

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவரென்றார் அய்யன்!

கொடியோரின் சொற்களை ஏற்றுப் பொறுப்போர்

துறவிகளுக் கொப்பாவார் சொல்.

குறள் 160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொ னோற்பாரிற் பின்னென்றார் வள்ளுவர்!

தன்பசி தாங்கியே நோன்பிருப்போர் 

எல்லோரும்

வன்சொல் பொறுத்தார்க்குப் பின்.








































0 Comments:

Post a Comment

<< Home