19 புறங்கூறாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
19 புறங்கூறாமை
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிதென்றார் அய்யன்!
அறவழி போற்றவில்லை என்றாலும் நாளும்
புறங்கூறி வாழ்தலோ தீது.
குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகையென்றார் அய்யன்!
அறமற்ற வாழ்வினும் நேரில் புகழ்ந்தும்
மறைவில் புறம்பேசல் கேடு.
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தருமென்றார் அய்யன்!
மறைவில் புறம்பேசி நேரில் புகழ்ந்து
கடைந்தெடுத்த கோழையாய் வாழ்கின்ற வேடம்
நடைப்பிணமாய் மாற்றும் உணர்.
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்லென்றார் வள்ளுவர்!
கண்ணெதிரே நேர்படப் பேசு தவறில்லை!
பின்னால் புறங்கூறல் தீது.
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படுமென்றார் அய்யன்!
புறம்பேசும் பண்புள்ளோன் என்றும்
அறத்தைப்
புறக்கணித்து வாழ்வோன் அறி.
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படுமென்றார் அய்யன்!
பிறரைப் பழித்துப் புறம்பேசு வோனைப்
பிறரும் குறைசொல்வார் கூறு.
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவரென்றார் அய்யன்!
அகங்குளிர சேர்த்துவைக்கும் பண்பற்றோர் நாளும்
புறம்பேசி தாழ்வார் கலைத்து.
குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டென்றார் வள்ளுவர்!
நண்பரைப் பற்றிக் குறைசொல்வோர் என்னதான்
அன்னியரைக் கூறமாட்டார் கூறு?
குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறையென்றார் அய்யன்!
புறம்பேசு வோரைச் சுமத்தலும் இங்கே அறமென்றே ஏற்கும் நிலம்.
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கென்றார் வள்ளுவர்!
மற்றவர் குற்றமுடன் தன்குற்றம் ஒப்பிட்டால்
எப்போதும் இங்கே புறங்கூறி வாழமாட்டோம்!
துன்பம் விலகும் உணர்.
மதுரை பாபாராஜ்
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
0 Comments:
Post a Comment
<< Home